லண்டனில் பேசியது குறித்து விளக்கமளிக்க விரும்புகிறேன் என ராகுல்காந்தி எம்.பி. கூறியுள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு கடந்த ஜனவரி 31ம் தொடங்கி பிப்ரவரி 13ம் தேதி வரை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 13ம் தேதி தொடங்கியது. இந்த இரண்டாவது அமர்வு வரும் ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நாடாளுமன்றத்தின் இரண்டாம் அமர்வு துவங்கியதில் இருந்து ஆளும் கட்சி எம்.பிக்களும் எதிர்க்கட்சி எம்.பிக்களும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய ஜனநாயகத்தை இழிவு செய்த ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி பாஜகவினர் முழக்கங்கள் எழுப்பியும், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்றக் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் முழக்கங்கள் எழுப்பியும் வருகின்றனர். ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகள் மாறி மாறி முழக்கங்கள் எழுப்பி அமளியில் ஈடுபடுவதால் இரு அவைகளிலும் அவையை பிற்பகல் 2 மணி வரையிலும் அதன் பிறகு நாள் முழுவதும் என தொடர்ந்து நான்கு நாட்களாக ஒத்திவைத்து சபாநாயகர்கள் உத்தரவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி. ராகுல்காந்தி, “அதானி குறித்து நான் நாடாளுமன்றத்தில் பேசியது அனைத்தும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதானி குறித்து நான் பேசியது எதுவும் ஆட்சேபத்திற்குரியது இல்லை. லண்டனில் பேசியது குறித்து விளக்கம் அளிக்க விரும்புகிறேன். ஆனால் மக்களவையில் பேச வாய்ப்பு கிடைப்பதில்லை.
என் மீது அமைச்சர்கள் புகார் அளித்துள்ளார்கள். எம்.பி.யாக அந்த புகாருக்கு விளக்கமளிக்க வேண்டியது அவசியம். அதற்கு பிறகுதான் ஊடகங்கள் முன் அது குறித்து பேச வேண்டும். நாளையாவது (இன்று) மக்களவையில் பேச அனுமதிப்பார்களா எனத் தெரியவில்லை. மேலும், அதானி குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் மோடி இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை” எனக் கூறினார்.