Skip to main content

“ஒரு மனிதரால் இப்படியெல்லாம் திரித்துப் பேசமுடியுமா...” - செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ

Published on 24/11/2022 | Edited on 24/11/2022

 

"I was amazed that a man could talk so twistedly" - Selvaperunthakai MLA

 

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நேற்று ஆளுநரைச் சந்தித்தார். தமிழகத்தில் நிலவும் முக்கியப் பிரச்சனைகளைக் குறித்து ஆலோசித்ததாகச் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும், “மருந்துத் தட்டுப்பாடு இருக்கிறது என்று அமைச்சரே ஒப்புக்கொண்டார். அதிமுக ஆட்சியில் மருந்துத் தட்டுப்பாடு இல்லாமல் இருந்தது. இன்று பல முக்கிய மருந்துகள் இல்லை. மருந்துத் தட்டுப்பாடு வர இந்த அரசு தான் காரணம்” என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.

 

இந்நிலையில், இதற்குப் பதில் அளித்து காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக ஆளுநரைச் சந்தித்தப் பின், தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவமனைகளில் மருந்துத் தட்டுப்பாடு நிலவுகிறது என்றும், தங்களது ஆட்சியில் தடையின்றி மருந்துகள் விநியோகிக்கப்பட்டன என்றும் கூறியுள்ளதாக ஊடகத்தில் செய்தி பார்த்தேன். ஒரு மனிதரால் இப்படியெல்லாம் உண்மைக்குப் புறம்பாகத் திரித்துப் பேச முடியுமா என்று வியந்து போனேன்.

 

அ.தி.மு.க. ஆட்சியில் அரசு மருத்துவமனைகளில் பல கோடிக்கும் அதிகமான காலாவதியான மருந்துகளை வாங்கிக் குவித்து வைத்துள்ளார்கள். பொதுக்கணக்குக் குழுவினர் மருத்துவமனைகளில் ஆய்வு செய்ததை விளக்க வேண்டிய அவசியம் வந்துள்ளது.

 

கடந்த ஆண்டு (22.10.2021) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் ஆய்வு செய்த போது, ரூபாய் 26 லட்சம் மதிப்பிலான காலாவதியான மருந்துகள் (2013-14) பயன்படுத்தப்பட்டன. இந்த ஆண்டு 30.03.2022 மதுரையில் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது ரூ 16 கோடியில் 2018-19 காலகட்டத்தில் தேவைக்கு அதிகமாக கொள்முதல் செய்யப்பட்டு, அதனால் அந்த மருந்துகள் காலாவதியானது கண்டுபிடிக்கப்பட்டது. அதே போன்று 29.06.2022 அன்று நெல்லை மாவட்டத்தில் மருத்துவமனையில் ஆய்வு செய்த போது கடந்த ஆட்சியில் 2017-18 காலகட்டத்தில் நார்வே நாட்டிலிருந்து டெங்கு, மலேரியாவைக் கண்டுபிடிக்க ரூபாய் 4.29 கோடி செலவில் மருத்துவக்கருவி வாங்கப்பட்டு பொதுமக்களுக்கு பயன்படாமல் அதுவும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், 27.08.2022 திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகளில் காலாவதி தேதி குறிப்பிடாமல் மருந்துப் பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

 

தஞ்சாவூர், பாபநாசம், கன்னியாகுமரி உள்பட இதுவரை பொதுக்கணக்குக் குழுவினர் ஆய்வு செய்த இடங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள், தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகள் குறிப்பிடாத சுமார் ரூ.700 கோடி மதிப்புள்ள மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

 

எடப்பாடி பழனிசாமி அவர்கள் தற்போதுள்ள அரசைக் குற்றம் சொல்வதற்குத் தாங்கள் தகுதியானவர்கள் தானா என்று சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்