சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் முன்னாள் மத்திய அமைச்சரின் மகனும் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களமிறக்கப்பட்டு தேர்தல் முடிவடைந்துள்ளது. தேர்தல் முடிவுகள் வர இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் அதற்குள் காங்கிரஸ் கட்சிக்கு உத்தேசமாக எத்தனை வாக்குகள் கிடைத்திருக்கும் என்பதை பூத் வாரியாக பதிவான வாக்குகள் அடிப்படையில் தேர்தல் கணக்கு போட்டு வருகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்.
சிவகங்கை நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள வாக்குச்சாவடி முகவர்களை வியாழக்கிழமை சந்தித்து பதிவான வாக்குகள் அதில் காங்கிரஸ் கட்சிக்கு உத்தேசமாக கிடைக்கும் வாக்குகள், அதேபோல மற்ற கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகள் எத்தனை என்று ஒவ்வொரு வாக்குச்சாவடி முகவரிடமும் பெற்றார். அதேபோல அடுத்த நாள் வெள்ளிக்கிழமை ஆலங்குடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட திருவரங்குளம் மேற்கு ஒன்றித்திய வாக்குச்சாவடி முகவர்களை ஆலங்குடியில் சந்தித்த அவர், மாலை திருவரங்குளம் கிழக்கு ஒன்றியம் மற்றும் அறந்தாங்கி வடக்கு ஒன்றியங்களுக்கு உட்பட்ட காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்களுடன் சந்திப்பு ஆலோசனைக் கூட்டம் கீரமங்கலத்தில் ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை தெற்கு மாவட்டத் தலைவர் சுப்புராம் மற்றும் வட்டார, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் செயல்பாடுகள் பற்றியெல்லாம் பேசியவர் கட்சிக்காரர்களை குறைகளையும் கேட்டறிந்தார் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சி வாக்குச்சாவடி முகவர்களிடம்.. ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் பதிவான வாக்குகள் எத்தனை? அதில் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளருக்கு எத்தனை வாக்குகள் கிடைக்கும். அதேபோல மற்ற வேட்பாளர்களுக்கு எவ்வளவு வாக்குகள் கிடைக்கும் என்பதை ஒவ்வொரு வாக்குச் சாவடி முகவரிடமும் உத்தேசப்பட்டிலை பெற்றதுடன் உத்தேச கணக்கு சொன்ன முகவரின் பெயரையும் சேர்த்து பேப்பரில் பதிவு செய்து கொண்டார். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்குச்சாவடி வாரியாக எத்தனை வாக்குள் கிடைக்கும் என்று ப.சிதம்பரம் உத்தேச வாக்கு கணக்கு பெற்று வருவது கட்சியினரிடையே பரபரப்பாகப் பேசப்படுகிறது.