“என்னை இந்து என்றே அழைக்க வேண்டும்” என கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் கூறியுள்ளார்.
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், வட அமெரிக்காவில் வசிக்கும் கேரள மாநிலத்தினைச் சேர்ந்த இந்துக்கள் அமைப்பு சார்பில் கூட்டம் நடைபெற்றது. இதில் கேரள மாநில ஆளுநர் ஆரிப் முகமது கான் கலந்துகொண்டார்.
நிகழ்வினைத் தொடங்கி வைத்து பேசிய அவர், “இந்தியாவில் பிறந்தவர்கள் அனைவரும் இந்துக்கள் தான். இந்தியாவில் விளையும் உணவை நம்பி வாழ்பவர்கள், இந்திய நதிகளிலிருந்து நீரை குடிப்பவர்கள் எவரும் தன்னைத்தானே இந்து என அழைத்துக் கொள்ள வேண்டும். நான் இந்து என்பதை ஒரு மதச் சொல்லாக கருதவில்லை. இந்து என்பது புவியியல் சொல் என பிரபல சீர்திருத்தவாதியும் கல்வியாளருமான சையது அகமது கான் கூறியுள்ளார். இந்து என்பது ஒரு பிரதேசத்தில் பிறந்தவர்களை குறிக்கும் ஒரு சொல்லாகும். என்னை நீங்கள் இந்து என்றே அழைக்க வேண்டும். ஆனால் நான் ஒரு இந்து என்று கூறுவது தவறு என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் இங்கு சதி நடக்கிறது” என அவர் கூறினார்.
ஆளுநரின் இந்தக் கருத்துக்கு ஒருசேர ஆதரவும் எதிர்ப்புகளும் வந்த வண்ணம் உள்ளன. மத்திய அமைச்சர் வி. முரளிதரன் ஆளுநரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அதே வேளையில் கேரள சாகித்ய அகாடமி தலைவரும் கவிஞருமான சச்சிதானந்தன் “இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களையும் அவர்களது கருத்துகளையும் புறக்கணிக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.