திருவண்ணாமலை தெற்கு மாவட்ட தி.மு.க அலுவலகத்தில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், மதிமுக, சிபிஎம், சிபிஐ, விசிக, முஸ்லீம் லீக், மமக உள்ளிட்ட கட்சிகளின் மாவட்டச் செயலாளர்கள் கலந்துகொண்டனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் திருவண்ணாமலை – எ.வ.வேலு, கீழ்பென்னாத்தூர் – பிச்சாண்டி, செங்கம் (தனி) – கிரி, கலசப்பாக்கம் – சரவணன், போளுர் – சேகரன், ஆரணி – அன்பழகன், செய்யார் – ஜோதி, வந்தவாசி (தனி) அம்பேத்குமாரை கூட்டணி கட்சியினருக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்வு நடைபெற்றது. இதற்கு திமுகவின் திருவண்ணாமலை தெற்கு மாவட்டச் செயலாளரும், மாஜி அமைச்சருமான எ.வ.வேலு தலைமை வகித்தார்.
அந்தக் கூட்டத்தில் பேசிய எ.வ.வேலு, “தற்போது நடக்கும் தேர்தல், சமூக நீதிக்கும், மனுநீதிக்கும் இடையே நடைபெறும் தேர்தல். இதில் சமூகநீதி நிலைக்க, வெற்றிபெற நாம் கடுமையாக உழைக்க வேண்டும். திமுக தேர்தல் வாக்குறுதியில், பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் கொடுக்கப்படும் எனக் கூறியது. உடனே அதிமுக 1,500 ரூபாய் வழங்குவோம் எனக் கூறி உள்ளனர். ஆட்சியில் உள்ளபோது செய்யாத இவர்கள், இப்போது செய்வோமெனச் சொல்லக் காரணம் தோல்வி பயம்தான். அவர்கள் வெற்றிபெற எதையாவது கூற வேண்டும் என கூறுகிறார்கள்.
அடுத்த சட்டமன்ற தேர்தலின்போது அதிமுக என்கிற கட்சியே இருக்கக்கூடாது, திமுக – பாஜக இடையேதான் போட்டி இருக்க வேண்டும் என பா.ஜ.கவினர் நினைக்கிறார்கள். அதிமுகவினர் நம்மிடம் சகோதரர்களாக பழகுபவர்கள், அவர்களின் நிலைமையை நினைத்தால் பாவமாக இருக்கிறது.
தமிழகத்தில் ஆட்சி அமைக்க 121 இடங்களில் வெற்றிபெற்றாலே ஆட்சி அமைத்திட முடியும். ஆனால், தற்போது இந்த எண்ணில் வெற்றிபெற்றால், ஆட்சி அமைத்துவிட்டு நிம்மதியாக துாங்க முடியாது. எந்த நேரத்திலும், எம்.எல்.ஏ.க்கள் விலைபோகும் நிலைக்குத் தள்ளப்படுவர். புதுச்சேரியில் குறைந்த எண்ணிக்கை எம்.எல்.ஏ.க்கள் வைத்து காங்கிரஸ் ஆட்சி அமைத்ததால், காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை பா.ஜ.க.வினர் விலைகொடுத்து வாங்கி ஆட்சியைக் கலைத்துவிட்டனர். அதுபோன்ற நிலை திமுகவிற்கு வந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் திமுக அதிக இடங்களில் போட்டியிடுகிறது.
150க்கும் மேலான இடங்களில் வெற்றிபெற்றால் மட்டுமே நிலையான ஆட்சியைத் தர முடியும் என்ற நிலை இன்று உள்ளது. இதை உணர்ந்துதான் கூட்டணிக் கட்சியினர் திமுக அதிக இடங்களில் போட்டியிடும் முடிவு சரியானது என உணர்ந்துள்ளனர். எனவே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் வெற்றிக்கு பாடுபட வேண்டும். திருவண்ணாமலை தொகுதியில், பாஜகவை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். அதுதான் நாம் தேர்தல் பணி சிறப்பாக செய்துள்ளோம் என்பதற்கான அடையாளம்” எனப் பேசினார்.