புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் கட்டணம் நிர்ணயிப்பதை நிறுத்த வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பியுமான திருமாவளவன் மற்றும் விசிக எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்திற்கு புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தனது கருத்தினை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “சுகாதாரத்திலும் கல்வியிலும் புதுவை தனது கவனத்தை செலுத்தி சேவை செய்து வருகிறது. ஜிப்மர், அரசாங்க மருத்துவமனைகள் மக்களுக்கு சேவை செய்யவே இருக்கிறது. ஜிப்மரில் புதிய பரிசோதனைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. வெளிமாநிலங்களில் உயர் பரிசோதனைக் கூடங்களில் செய்யப்படும் பரிசோதனைகளுக்கு வசதி படைத்தவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அவர்கள் சொல்லி இருந்தார்கள். நான் உடனே சுகாதாரத்துறை அமைச்சருக்கும் இணை அமைச்சருக்கும் நேரடியாக தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டணம் அதிகமாக உள்ளது என்றும் இன்னும் அதை குறைக்க வேண்டும் என்றும் கூறியிருந்தேன்.
என்னைப் பொறுத்தவரை இந்த மக்களையும் சிகிச்சை பெறும் தமிழக மக்களையும் பிரித்துப் பார்க்கவில்லை. ஜிப்மரை கேட்டால் எனக்கு ஏன் கோவம் வருகிறது என கேட்கிறார்கள். எனக்கு கோவம் எல்லாம் வரவில்லை. “ஏழை மக்களை உறிஞ்சி..” என்ற வார்த்தைகளை எல்லாம் போடுகிறார்கள். இன்னும் ஒன்று சொல்கிறார்கள். முன்னாள் மத்திய அரசு இருந்ததை விட இப்போது குறைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு அளிக்கும் வகையில் ஆர்ப்பாட்டத்தை மருத்துவமனை முன் செய்ய வேண்டாம். சிலர் சொல்கிறார்கள் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எங்களுக்கு மத்திய அரசின் உதவியோடு நடக்கும் மருத்துவமனைகளை கேட்பதற்கு உரிமை உள்ளது என சொல்கிறார்கள். உங்களுக்கு உரிமை இருக்கிறது. இயக்குநரை சென்று பார்த்து என்ன வசதிகள் உள்ளது என கேளுங்கள். ஆளுநர் கருத்து சொல்லக்கூடாது. அப்படி சொன்னால் ஆர்ப்பாட்டம் தான் நடத்துவோம் என்றால் நடத்தட்டும். கவலை இல்லை. ஜிப்மரில் கொரோனா காலத்தில் அனைத்து மருத்துவர்களும் உயிரைப் பணையம் வைத்து நோயாளிகளைப் பாதுகாத்தார்கள். எந்த பாராளுமன்ற உறுப்பினர்களும் வரவில்லை. நான் மருத்துவமனைக்குள் சென்று பார்த்துவிட்டு வந்தேன்.
இவ்விவகாரத்தை பொறுத்தவரை போராட்டம் நடத்தித்தான் நம்மை வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இல்லை. ஆக்கப்பூர்வமாக செயல்படலாம். தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு இங்கு என்ன வேலை என நான் கேட்கவில்லை. நான் கூறியதெல்லாம், உங்கள் முகவரி புதுச்சேரியில் உள்ளது. விழுப்புரம் மக்கள் உங்களுக்கு வாக்களித்துள்ளார்கள். உங்கள் தொகுதியில் இருங்கள் என சொன்னேன்” எனக் கூறினார்.