“என்னை கல்லறை தோண்டி புதைக்க நினைக்கிறது காங்கிரஸ்” என கர்நாடக சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி அங்கு நடைபெற்ற நிகழ்வில் கூறியுள்ளார்.
கர்நாடக மாநில சட்டப் பேரவைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு மாதங்களே உள்ளது. பாஜகவின் தேசியத் தலைவர்கள் கர்நாடக மாநிலத்திற்கு அடிக்கடி சுற்றுப்பயணம் செய்து மக்களை சந்தித்த வண்ணம் உள்ளனர். மேலும், கர்நாடகத்தில் பாஜக ஆட்சி நடைபெறுவதால் ஆட்சியை தக்கவைக்க தீவிர பிரச்சாரங்களையும் பொதுக்கூட்டங்களையும் ஏற்பாடு செய்து தலைவர்கள் உரையாற்றுகின்றனர். கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் பிரதமர் மோடி 5 முறை கர்நாடக மாநிலத்திற்கு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மாண்டியாவில் நடைபெறும் நிகழ்வில் பெங்களூரு - மைசூர் இடையேயான 118 கி.மீ தொலைவுடைய பெங்களூரு முதல் மைசூர் வரையிலான 10 வழிச் சாலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த சாலை திட்டத்தின் மதிப்பு 8 ஆயிரத்து 480 கோடி ரூபாயாகும். மேலும், மாண்டியா பகுதிகளில் 16 ஆயிரம் கோடியிலான வளர்ச்சித் திட்டங்களையும் பிரதமர் துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் பேசிய மோடி, “காங்கிரஸ் ஆட்சியில் ஏழை மக்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாறாக அவர்களுக்கு சேர வேண்டிய பணத்தை கொள்ளை அடித்தனர். நாங்கள் 9 ஆண்டுக்கால ஆட்சியில் 3 கோடி ஏழைகளுக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தோம். 40 லட்சம் குடிநீர் இணைப்பு கொடுத்தோம். வேறு எந்த மாநிலமும் இவ்வளவு பலன் பெறவில்லை.
மோடியை கல்லறை தோண்டி புதைக்க நினைக்கிறது காங்கிரஸ். மோடிக்கும் பாஜகவிற்கும் கல்லறை தோண்டுவதில் தான் காங்கிரஸ் தீவிரமாக உள்ளது. ஆனால், நான் எளிய மக்களின் வாழ்க்கையை உயர்த்த தீவிரமாக இருக்கிறேன். அவர்களது நம்பிக்கையே எனது கேடயம்” என்றார்.