தமிழக சட்டசபையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் துவங்கியது. கூட்டம் துவங்கியது முதலே திமுக கூட்டணிக் கட்சிகள் ஆளுநருக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்.
ஆளுநர் உரையாற்றும்போது அரசு தயாரித்த உரையை முழுமையாகப் படிக்காமல் சில வார்த்தைகளை தவிர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக, 'திராவிட மாடல்' என்ற வார்த்தை ஆளுநரால் தவிர்க்கப்பட்டது. அதேபோல் 'தமிழ்நாடு கவர்ன்மென்ட்' என்ற வார்த்தைக்குப் பதில் 'திஸ் கவர்ன்மென்ட்' என மாற்றியுள்ளார். மேலும் பெரியார், அண்ணா, காமராஜர், கலைஞர், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்கள் பெயரும் தவிர்க்கப்பட்டது. இதனால் பேரவையில் இருந்து திமுக கூட்டணிக் கட்சிகள் வெளியேறின. தொடர்ந்து தமிழக முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போதே சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் வெளியேறினார்.
முன்னதாக, சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக ஆளுநர் காலை 9.57 மணியளவில் வருகை தந்தார். அப்போது ஆளுநருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டு, பேண்ட் வாத்தியங்கள் முழங்க பாடல் இசைத்து காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இதையடுத்து, ஆளுநருக்கு சபாநாயகர் அப்பாவு, தலைமைச் செயலாளர் இறையன்பு ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் இதற்கு முன் எந்த ஆளுநருக்கும் இது போன்ற அணிவகுப்பு மரியாதை கொடுத்ததில்லை என்றும், ஆளுநர் ஆர்.என்.ரவி காவல்துறையில் உயர்பதவியில் இருந்தவர் என்பதால் அவருக்கு முதன்முறையாக இத்தகைய மரியாதை அளிக்கப்பட்டது என்றும் அங்கிருந்த அதிகாரிகள் கூறினர்.