நடந்து முடிந்த 18 தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல்களில் ஆறு தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றிபெறும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கிடைத்த ரிப்போர்ட். அதனால் 19-ந்தேதி நடக்கும் நான்கு சட்டமன்ற இடைத்தேர்தல்களில் இரண்டில் கட்டாயம் வெற்றிபெற வேண்டும், இல்லையென்றால் ஆட்சியைக் காப்பாற்ற முடியாது என எடப்பாடி அமைச்சர்களிடம் பேசியிருக்கிறார். அதனால் சட்டமன்ற இடைத்தேர்தல் களத்தில் அ.தி.மு.க. வேகமாக களம் காண்கிறது. இந்த நான்கு தொகுதிகளில் அரவக்குறிச்சி தொகுதியில் செந்தில்பாலாஜி ஜெயித்துவிடக்கூடாது என்பதில் அதிக கவனம் எடுக்கச் சொல்லி உத்தரவிட்டிருந்தார் எடப்பாடி.
மத்தியில் பா.ஜ.க. கூட்டணியில் எனக்கு மந்திரி பதவி வேண்டும்' என கண்டிஷன் போட்டுக்கொண்டிருக்கும் தம்பிதுரையிடம், நீங்கள் கரூர் பாராளுமன்றத் தொகுதியில் ஜெயித்தால் மட்டும் போதாது, அரவக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் நமது கட்சி வெற்றிபெற்றால்தான் மத்திய மந்திரி பதவி'' என எதிர் கண்டிஷன் போட்டிருக்கிறார் எடப்பாடி. அவருடன் சீனியர் அமைச்சர்களான செங்கோட்டையன், தங்கமணி, சுகாதாரத்துறை விஜயபாஸ்கர், போக்குவரத்து விஜயபாஸ்கர் ஆகியோரையும் தேர்தல் பொறுப்பாளர்களாக்கியுள்ளார். இவர்களுடன் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, கே.சி.கருப்பணன் ஆகிய அமைச்சர்கள் மற்றும் திருச்சி, கரூர், நாமக்கல் பகுதி மா.செ.க்கள், ஒன்றிய செயலாளர்கள் என பெரிய படையே களமிறங்கியுள்ளது. அவர்களிடம் தனிப்பட்ட முறையில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்போது எடப்பாடி பேசியிருக்கிறார்.