அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பெரும்பாலான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராஜன் செல்லப்பா இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், '' எடப்பாடி பழனிசாமி எந்த பேட்டியும் கொடுக்கவில்லை, எந்த தகவலும் சொல்லவில்லை. ஆனால் ஒருவர் நடக்கும் என்கிறார், ஒருவர் நடக்காது என்கிறார், ஒருவர் செல்லாது என்கிறார். இந்த சூழ்நிலையில் ஓபிஎஸ்-க்கு ஒருபக்கம் நெகட்டிவ் அப்ரோச் உள்ளது. எதுவும் அவருக்கு பாசிட்டிவாக இல்லை. அதைப் புரிந்துகொண்டு அவர் விலக வேண்டும். ஓபிஎஸ்-ஐ விமர்சிக்க விரும்பவில்லை. அவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை வைக்கிறார். சதி வலை பின்னப்பட்டுள்ளது என்கிறார். என்ன சதி வலை பின்னப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நேற்று தொண்டர்கள் அவருக்கு என்ன பேர் வைத்தார்கள் தெரியுமா? மரியாதை மிகுந்த ஓபிஎஸை மரியாதையோடு பார்த்த நாங்கள், பன்னீர் செல்வம் என்று அழைத்த நாங்கள் இப்பொழுது அவரை கண்ணீர் செல்வம் என்று அனுதாபத்தோடு வருத்தப்படுகிறோம் என்கிறார்கள்.
அனுதாபத்தைத் தேடுவதற்கு ஓபிஎஸ் எல்லா வகையிலும் முயற்சி செய்கிறார். பொதுக்குழுவில் என்ன நடந்தது. பெரியார் இறந்த இறுதி நிகழ்வில் கலந்துகொண்டபொழுது எம்ஜிஆர் மீதே காலணியைத் தூக்கி எறிந்திருக்கிறார்கள், சட்டமன்றத்திலேயே ஜெயலலிதா உடையை இழுத்திருக்கிறார்கள். அப்பொழுதெல்லாம் வராத உணர்வா? ஆனால் தென்மாவட்டங்களில் அவருக்கு அவமரியாதை செய்துவிட்டதாகச் சிலர் பொய் செய்திகளைப் பரப்பி வருகின்றனர். அவருக்கு எந்த அவமரியாதையும் ஏற்படுத்தவில்லை. பொதுக்குழு நடக்கக்கூடாது என்று கட்சித் தலைமையே நீதிமன்றம் சென்றது இங்குதான் நிகழ்ந்துள்ளது. எனவே தென்மாவட்ட மக்கள் அவரை அடையாளம் கண்டுகொண்டனர்'' என்றார்.