இன்னும் 6 நாட்களில் தேர்தலை சந்திக்க இருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் ஜூரம் உச்சகட்டத்தில் இருக்கிறது. கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தலில் அதிமுக ஆட்சியை பிடித்திருந்தாலும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான தொகுதிகளில் இலை காணாமல் போக, விக்கிரவாண்டி உள்ளிட்ட பல தொகுதிகளில் சூரியன் உதித்திருந்தது. அந்த வகையில் திமுக சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த சட்டமன்ற உறுப்பினர் ராதாமணி சில மாதங்களுக்கு முன் உடல் நிலைக்காரணமாக மரணமடைந்தார்.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் விக்கிரவாண்டி தொகுதியில் அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி பிரச்சாரத்தில் போது ஸ்டானினை கடுமையாக விமர்சனம் செய்து பேசியுள்ளார். அவர் பேசும்போது, " நாடாளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து திமுக வெற்றி பெற்றது. அது தற்போது தெரிந்துவிடும் என்று திமுக அச்சப்படுகிறது. மீத்தேன், கச்சத்தீவு, காவிரி மற்றும் இலங்கை தமிழர் பிரச்சனை போன்றவற்றுக்கு திமுகவே காரணம்" என விமர்சித்தார். மேலும் பேசிய அவர், தேர்தல் வந்தவுடனே திமுகவுக்கு வன்னியர்கள் ஞாபகம் வந்துவிடும் எனவும், அதனால் தான் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அறிவித்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.