Skip to main content

கொள்ளையடித்த நகையை பரிசாக கொடுத்ததாக வாக்குமூலம்... ஆளும் கட்சி விவிஐபிக்களை கெஞ்சும் நடிகைகள்..!

Published on 18/10/2019 | Edited on 18/10/2019

 

திருச்சி லலிதா ஜூவல்லரியில் நடந்த நகைக்கொள்ளை சம்பவத்தில் திருவாரூரைச் சேர்ந்த முருகன் மற்றும் சுரேஷ் ஆகியோர் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தான். முருகன் கர்நாடக மாநிலம் பெங்களூவில் வேறொரு வழக்கில் சரண் அடைந்தான். 
 

செங்கம் நீதிமன்றத்தில் சரண் அடைந்த சுரேசை, திருச்சி போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்போது அவன் பல்வேறு தகவல்களை சொல்லியுள்ளான். இதுபற்றி போலீஸ்காரர் ஒருவர் கூறும்போது, ''முருகன் கொள்ளையடித்த பணத்தில் சினிமா தயாரிக்க திட்டமிட்டு, அதற்காக சுரேசுடன் ஐதராபாத்தில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியுள்ளான். அப்போது தெலுங்கு, தமிழ் நடிகைகள் பலரை சந்தித்து படத்தில் நடிப்பது குறித்து பேசியுள்ளான். 

 

robbery


 

இதுபற்றி மேலும் சுரேஷ், ஒரு தமிழ் நடிகையை ஐதராபாத்தில் நானும், முருகனும் சந்தித்துப் பேசினோம். அப்போது அவர் தான் பிஸியாக இருப்பதாக தெரிவித்தார். அப்போது சில நகைகளை காண்பித்தோம். நன்றாக இருக்கிறது என்றார். அப்போது நாங்கள் நகைக்கடை வைத்துள்ளோம் என்றதும், அப்படியா என்றவர் நெருக்கி பழக ஆரம்பித்தார்.  


 

எங்களிடம் நெருங்கி பழகியதால் அந்த நடிகைக்கு முருகன் நகைகளை பரிசாக அளித்தார். அந்த நடிகையும் மறுக்காமல் மகிழ்ச்சியாக வாங்கிக்கொண்டார். அதிலிருந்து நாங்கள் தமிழ், தெலுங்கு நடிகைகளுடன் நெருக்கமாக பழகினோம்'' என்று தெரிவித்துள்ளான். சுரேஷ் சொல்வது உண்மையாக இருக்குமா? போலீசாரின் கவனத்தை திசை திருப்ப இப்படி சொல்கிறானா? என்று விசாரணை நடத்த முருகனை காவலில் எடுக்க திருச்சி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் பெங்களூரு நீதிமன்றம் பெங்களூருவில் நடந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக பெங்களூரு போலீசாருக்கே முருகனை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து வருகிறது. இதனால் முருகனை எப்படி காவலில் எடுத்து விசாரிப்பது என திருச்சி போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர். 
 

இதனிடையே முருகன் நெருங்கி பழகியதாக கூறப்படும் நடிகைகளிடம் தமிழக மற்றும் கர்நாடக போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளார்களாம். உங்களுக்கு எப்படி முருகன் அறிமுகம்? எப்படி நகையை பெற்றீர்கள்? அந்த நகைகளை வைத்திருக்கிறீர்களா? முருகனைப் பற்றி வேறென்ன தெரியும்? என பல்வேறு கேள்விகளை கேட்க உள்ளார்களாம்.


 

இதனை அறிந்த தமிழ் மற்றும் தெலுங்கு நடிகைகள், ஆளும் கட்சியைச் சேர்ந்த விவிஐபிக்களை தொடர்பு கொள்ள முயற்சிக்கிறார்கள். ஆளும் கட்சி விவிஐபிக்களுக்கு நெருக்கமானவர்களிடம், அவர்கள் கொள்ளையர்கள் என்று தெரியாது, சினிமா தயாரிப்பாளர்கள் என்று வந்தார்கள், நகைக்கடை வைத்திருப்பதாகவும் சொன்னார்கள், நகையை பரிசாக அளிப்பதாக சொன்னதால் வாங்கிக்கொண்டோமே தவிர மற்றப்படி எந்தவித தொடர்புகளும் கிடையாது. இதனை அவர்களுக்கு (ஆளும் கட்சி விவிஐபிக்கள்) தெரியப்படுத்துங்கள். போலீஸ் விசாரணை செய்ய வந்தால் அசிங்கமாகும். எங்களுக்கு இப்போது நல்ல மார்க்கெட் இருக்கிறது. அதை கெடாமல் பார்த்துக்கொள்ளணும். அதற்கு உங்க உதவி வேண்டுமென்று தொடர்ந்து போன் செய்து வருகிறார்களாம். 
 

கொள்ளைச் சம்பவ விஷயம் கைது, பறிமுதல் என பெரிய அளவில் வெளியே தெரிந்துவிட்டதால் இதில் எப்படி நாம் தலையிட முடியும், தலையிட்டால் நமக்கு அவப்பெயர் ஏற்படாதா என்று ஆளும் கட்சியினரும் நழுவி வருகிறார்களாம்...

 


 

சார்ந்த செய்திகள்