மகாகவி பாரதியாரின் 141 ஆவது பிறந்தநாள் நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது. இதில் கலந்துகொள்ள வருகை தந்த தெலுங்கானா ஆளுநரும் புதுச்சேரி துணை நிலை ஆளுநருமான தமிழிசை சவுந்தர்ராஜன் நெல்லையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் தங்கினார். அப்போது செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது மணக்குளம் விநாயகர் கோவில் லட்சுமி யானைக்கு பதில் வேறு யானை வாங்குவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆளுநர், “யானை வாங்குவது தொடர்பாக வேறு வேறு கருத்துகள் உள்ளது. சிலர் யானை வாங்க வேண்டும் என்கின்றனர். சிலர் யானை வாங்க வேண்டாம் என்கின்றனர்.
அதனால் பொதுமக்களின் ஒருமித்த கருத்தை பார்த்து முடிவு செய்வார்கள். நான் மட்டும் முடிவு செய்யமுடியாது. முதலமைச்சர், அரசாங்கம் எதிர்க்கட்சித் தலைவர்கள் போன்றோரிடமெல்லாம் ஆலோசனை செய்யப்பட்ட பின் முடிவு எடுக்கப்படும். ஆனால் லட்சுமி யானை இன்று கூட என் மனதில் நீங்காமல் இருக்கிறது.
நாராயணசாமி கிரண்பேடிக்கும் எனக்கும் வித்தியாசம் இல்லை என சொல்லுகிறார். அப்படி எல்லாம் இல்லை. நானும் முதல்வரும் ஒருங்கிணைந்த தன்மையுடன் பணியாற்றுகிறோம் என்பது தான். நாங்கள் அரசாங்கத்திற்கு துணையாக தான் இருக்கின்றோம். துணைநிலை ஆளுநர் அரசாங்கத்திற்கு துணையாக இருப்பதால் உண்மையான துணைநிலை ஆளுநராக பணியாற்றி கொண்டிருக்கிறேன்.
ஏற்கனவே தீவிர அரசியல் செய்வதாக தெலுங்கானா முதல்வர் சொல்லுகிறார். என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு அப்படி தோன்றுகிறது. அவ்வளவு தான். நான் என் வேலையை சரியாக செய்கிறேன். அவர்கள் என்னை அரசியல்வாதியாக பார்க்கிறார்கள். நான் ஆளுநராக தான் பணியாற்றுகிறேன்” என்றார்.