சனாதன ஒழிப்பு மாநாட்டில் சனாதனத்தை நாம் எதிர்ப்பதை விட ஒழிக்க வேண்டும் என அமைச்சர் உதயநிதி பேசியது இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலைகளையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியுள்ளது. பாஜக, இந்துத்துவா அமைப்புகள் போன்றவை அமைச்சர் உதயநிதிக்கு எதிராகக் கருத்து தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் அவரது பேச்சுக்கு ஆதரவான கருத்துகளும் குவிந்து வருகின்றன.
இதுகுறித்துப் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ. ராசா, “பாஜகவில் எந்த கொம்பனாக இருந்தாலும் வாருங்கள் டெல்லியில் பொதுவெளியில் லட்சம் பேர் கூடும் இடத்தில் சனாதனம் குறித்து விவாதிக்க நான் தயார். நீங்கள் தயாரா? சனாதனத்தை நாங்கள் அழித்த காரணத்தால் தான் அமித்ஷா உள்துறை அமைச்சராக உள்ளார். இல்லையெனில் வேறு வேலைக்குச் சென்று இருப்பார். சனாதனத்திற்கு எதிராக நாங்கள் போராடியதால் தமிழிசை சவுந்தரராஜன் இன்று ஆளுநர், எங்களால் தான் ஆடு மேய்க்காமல் அண்ணாமலை இன்று ஐ.பி.எஸ், வானதி ஸ்ரீனிவாசன் இன்று வழக்கறிஞர். நாங்கள் ஒழித்த சனாதனத்தால் வந்து உட்கார்ந்து கொண்டு சனாதனம், சனாதனம் என பேசுகிறீர்களே? உங்களுக்கு வெட்கமா இல்லையா?” என்று பேசியிருந்தார்.
இந்த நிலையில் ஆ. ராசா எம்.பியின் பேச்சு குறித்து புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடன் கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர், “சனாதனம் என்றாலே சாதி மட்டும்தான் என்று திமுகவினர் சொல்கின்றனர். அப்படி இல்லை. சம தர்மம் தான் சனாதனம். சனாதனம் என்பதை தவறாகப் புரிந்து கொண்டுள்ளார்கள். சனாதனத்தை எதிர்த்து பேசும் ஆ. ராசாவால் அவரது கட்சியில் முதல்வராக முடியுமா? தலைவராக முடியுமா? உதயநிதிக்கு கொடுக்கும் அங்கீகாரம் மற்றவர்களுக்கு கொடுத்து விடுவார்களா? சனாதனத்தை எதிர்த்து பேசுபவர்கள் முதலில் அந்த கட்சியில் நடக்கும் சர்வாதிகாரத்தையும் எதிர்த்து பேசுங்கள். அதைவிட்டுவிட்டு உங்களால்தான் தமிழிசை ஆளுநர் ஆனார். அண்ணாமலை காவல் அதிகாரியானார் என்று பேசுவது எல்லாம் தவறு. நாங்கள் கடினமாகப் படித்து, உழைத்து இந்த நிலைமைக்கு வந்திருக்கிறோம். எல்லாத்துக்கும் நீங்கள் சொந்தம் கொண்டாட முடியாது” என்று பதிலளித்துள்ளார்.