அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டம் மிக ஆபத்தானது என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி இராமதாஸ் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மருத்துவமனைகளை நடத்துவதில் அரசின் சுமையை குறைக்கும் நடவடிக்கைகளின் ஒரு கட்டமாக அனைத்து மாவட்ட அரசு மருத்துவமனைகளையும் தனியாரிடம் ஒப்படைத்து விடலாம் என்று நிதி ஆயோக் அமைப்பு பரிந்துரை செய்திருக்கிறது. நிதி ஆயோக்கின் இந்த ஆலோசனை காலம் காலமாக கட்டமைக்கப்பட்ட அரசு மருத்துவமனைகளை சிதைக்கும் நோக்கம் கொண்ட ஆபத்தான யோசனையாகும்.
மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக செயல்பட்டு வந்த மத்திய திட்டக்குழுவை கலைத்து விட்டு உருவாக்கப்பட்ட அமைப்பான நிதி ஆயோக், ‘‘அரசு மாவட்ட மருத்துவமனைகளை தனியார் மருத்துவக் கல்லூரிகளுடன் இணைத்தல்’’ என்ற தலைப்பில் தயாரித்து வெளியிட்டுள்ள 250 பக்கங்கள் கொண்ட ஆவணத்தில் அரசு மருத்துவமனைகளை தனியாருக்கு தாரை வார்ப்பது குறித்து விரிவாக விளக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் மருத்துவக் கல்விக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அவற்றை நிறைவேற்றும் அளவுக்கு மத்திய, மாநில அரசுகளிடம் போதிய நிதி உள்ளிட்ட ஆதாரங்கள் இல்லை என்றும், அத்தகைய சூழலில் அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து, அவற்றை அடிப்படையாக வைத்து மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க தனியாரை அனுமதிக்கலாம் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. இது ‘‘நீ அரிசி கொண்டு வா.... நான் உமி கொண்டு வருகிறேன். இருவரும் ஊதி ஊதி பகிர்ந்து உண்ணலாம்’’ என்ற பழமொழிக்கு ஏற்ப அரசின் சொத்துகளை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டமாகும். தனியாருக்கு சாதகமாகவே இப்பரிந்துரையை நிதி ஆயோக் வழங்கியுள்ளது.
நிதி ஆயோக் முன்வைத்துள்ள இன்னொரு யோசனை சமூக நீதியையும், சமூக பாதுகாப்பையும் சிதைக்கும் நோக்கம் கொண்டதாகும். மாவட்ட அரசு மருத்துவமனைகள் அனைத்தும் தனியார் மருத்துவ நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டால், அம்மருத்துவமனைகளில் உள்ள மொத்தப் படுக்கைகளில் பாதியளவு கட்டண படுக்கைகளாகவும், மீதமுள்ளவை இலவச படுக்கைகளாகவும் மாற்றப்படும். கட்டணப் படுக்கைகள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு, ஏழைகளுக்கு இலவசப் படுக்கைகளில் இலவசமாக மருத்துவம் அளிக்கப்படும் என்றும் நிதி ஆயோக் கூறியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் அனைத்து படுக்கைகளிலும் இலவசமாக மருத்துவம் அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவற்றில் பாதியை கட்டண படுக்கைகளாக மாற்றுவது எந்த வகையில் ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு பயனளிக்கும்?
அதுமட்டுமின்றி, தனியார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான படுக்கைகள் ஏழைகளுக்கு இலவச மருத்துவம் வழங்குவதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்ற விதி பெரும்பாலான மருத்துவக் கல்லூரிகளில் கடைபிடிக்கப்படுவதில்லை. இத்தகைய சூழலில் தனியார் நிர்வாகத்தில் நடக்கும் அரசு மருத்துவமனைகளில் 50% படுக்கைகளில் இலவச மருத்துவம் வழங்கப் படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. இது ஏழைகளுக்கு இலவச மருத்துவத்தை தடுத்து விடும்.
நிதி ஆயோக்கின் இந்த பரிந்துரை இன்றைய சூழலில் தேவையற்றதாகும். மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன், மாவட்ட மருத்துவமனைகளை மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. அதற்கான திட்டத்தின்படி தமிழகத்தில் 9 மருத்துவக் கல்லூரிகள் உள்பட மொத்தம் 159 மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வரும் சூழலில், அரசு மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைத்து, அவர்கள் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க அனுமதிக்க வேண்டிய தேவை என்ன?
மத்திய சுகாதார அமைச்சராக நான் பணியாற்றிய போது உலகின் மிகப்பெரிய சுகாதாரத் திட்டமாக தேசிய ஊரக சுகாதார இயக்கம் தொடங்கப்பட்டது. அதன் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி மாவட்ட மருத்துவமனைகள் வரை அனைத்து நிலை மருத்துவ நிலையங்களும் மேம்படுத்தப் பட்டன. அதன்பயனாக இப்போது அனைத்து வசதிகளுடனும் இயங்கி வரும் மாவட்ட மருத்துவமனைகளை தனியாரிடம் ஒப்படைப்பது வரி செலுத்திய மக்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் துரோகம் ஆகும்.
கல்வி, மருத்துவம் ஆகியவற்றுக்காக அதிகம் செலவழிப்பதால் தான் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடனாளி ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆகையால் கல்வி, மருத்துவம் ஆகியவை இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மாவட்ட அரசு மருத்துவமனைகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மருத்துவமும் இலவசமாக கிடைக்காது; மருத்துவக் கல்வியும் நியாயமான கட்டணத்தில் கிடைக்காது. எனவே, தனியாருக்கு மட்டும் பயனளிக்கக்கூடிய நிதி ஆயோக்கின் யோசனையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும். மாறாக, மாவட்ட மருத்துவமனைகளை மத்திய, மாநில அரசுகள் இணைந்து அரசு மருத்துவக் கல்லூரிகளாக மாற்றும் திட்டத்தை மத்திய அரசு விரிவுபடுத்த வேண்டும்; விரைவுபடுத்த வேண்டும்.'' இவ்வாறு கூறியுள்ளார்.