ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி 16 ஆம் தேதி தொகுதியில் வாக்கு சேகரித்தார்.
கனிமொழி பேசுகையில், "தமிழ்நாட்டின் நடப்பது திராவிட மாடல் ஆட்சி. பகுத்தறிவு, சுயமரியாதை, தன்னம்பிக்கை, சுதந்திரம் இவற்றில் எந்தவித சமரசம் இல்லாமல் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி நடக்கிறது. தமிழக மக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து முதல்வர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக பெண்கள் இலவசப் பேருந்து திட்டம் என்பது மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத ஒரு திட்டமாக இத்திட்டம் நமது தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதுபோன்று பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. முதல்வரின் செயல்களுக்கு அவரின் நல்ல நோக்கத்திற்கு உறுதுணையாக மக்கள் இருக்க வேண்டும். இந்த தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சி வேட்பாளராக இளங்கோவன் நிற்கிறார். அவருக்கு கை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகளில் வெற்றி அடையச் செய்ய வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.