அதிமுக அலுவலகத்தில் நிகழ்ந்த மோதலை தொடர்ந்து சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலக சாவி எடப்பாடி பழனிசாமியிடம் ஒப்படைக்கப்பட்டது. உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஓ.பன்னீர்செல்வம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து இருந்தார். இந்நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த ஓபிஎஸ் மேல்முறையீடு செய்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகளால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
உங்களை கட்சியிலிருந்து நீக்கி விட்ட பின் நீங்கள் எப்படி அலுவலகத்திற்கு உரிமைகோர முடியும், உரிமையியல் நீதிமன்றத்தை நாடி அலுவலக சாவியை பெறுவதற்கான நீதிமன்ற நடவடிக்கையை ஏன் நீங்கள் எடுக்கக்கூடாது என எனவும் கேள்வி எழுப்பி ஓபிஎஸ் மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இதனையடுத்து டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், '' அதிமுக அலுவலகத்தை அடித்து உடைத்து சூறையாடி அதற்கு சீல் வைக்கும் நிலையை ஓபிஎஸ் தரப்பு உருவாக்கியது. ஆளும் திமுக தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து 32 ஆண்டுகள் ஆண்ட ஒரு இயக்கம், 50 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இயக்கமாக இருக்கக்கூடிய அதிமுகவை அழிக்க அதிகாரத்தைப் பயன்படுத்தி, ஓபிஎஸ் திமுகவுடன் இணைந்து அலுவலகத்தை சீல் வைக்க வைத்தார். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி சாவியை எடப்பாடி பழனிச்சாமி வசம் ஒப்படைக்க கடந்த 20 ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தார். நங்கள் 21 ஆம் தேதி அலுவலகத்தில் புகுந்தோம். இந்த உத்தரவை எதிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கில் நீதிபதிகள் சொன்ன முக்கியமான கருத்து மூலம் திமுகவிற்கு மாபெரும் சம்மட்டி அடி கொடுத்துள்ளது உச்சநீதிமன்றம். ஒரு அரசியல் கட்சியின் அலுவலகத்தை இப்படி முடக்கினால் எப்படி அக்கட்சி செயல்படும். இது ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோதமான செயல். தனி நீதிபதியின் உத்தரவு செல்லும். ஆர்டிஓ சீல் வைத்தது தவறு மிகவும் தவறு'' என பேசினார்.