பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
இன்று காலை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிவிப்பில், “யூடியூப் சேனல்களுக்கு தமிழக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் நேர்காணல் வழங்கி வரும் சிலர் கட்சியின் நிலைப்பாடுகளை விடுத்து தங்களது சொந்த கருத்துக்களை முன்னிறுத்தி வருகிறார்கள். கூட்டணிக் கட்சியை பற்றியும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களை பற்றியும் யூடியூப் சேனல்களில் கட்சியில் சிலர் முன்வைக்கும் விமர்சனங்கள் கட்சியின் நிலைப்பாடாக மாறுவது ஏற்புடையது அல்ல. அந்த காணொளியை காணும் மக்களுக்கு இது பாரதிய ஜனதா கட்சியின் அதிகாரப்பூர்வமான கருத்து மற்றும் கட்சியின் எண்ண ஓட்டம் இது தான் போன்ற தவறான பிம்பத்தை மக்களிடம் எடுத்து சென்றுவிடுகிறது.
கட்சியின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களை தவிர்த்து மற்றவர்கள் யூடியூப் சேனல்களுக்கு நேர்காணல்கள் வழங்க விருப்பப்பட்டால் கட்சியின் மாநில ஊடகப் பிரிவின் தலைவருக்கு தெரியப்படுத்துங்கள். இனி வரும் காலங்களில், கட்சியின் ஒப்புதல் பெற்ற பின்பே நேர்காணல்கள் வழங்க வேண்டும். கட்சி கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்” எனக் கூறியிருந்தார்.
இந்நிலையில் பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் வகித்துவரும் பொறுப்புகளில் இருந்து 6 மாதங்களுக்கு நீக்கப்படுவதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும் கட்சியின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் தொடர்ச்சியாக செயல்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் கட்சியின் நிர்வாகிகளும் தொண்டர்களும் அவரிடம் எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு, அண்டை மாநில தமிழ் வளர்ச்சிப் பிரிவின் மாநிலத் தலைவராக காயத்ரி ரகுராம் செயல்பட்டதும் குறிப்பிடத்தக்கது.