Skip to main content

தென்னந்தோப்பில் சூதாட்டம்... திமுக கவுன்சிலர் உள்பட 16 பேர் கைது... ரூ. 13.62 லட்சம் பறிமுதல்... 

Published on 05/08/2020 | Edited on 05/08/2020
Pudukkottai

 

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலோர பகுதியில் கஞ்சா, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோதச் செயல்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதில் சூதாட்ட கிளப்களுக்கும் பஞ்சமில்லை.

 

மீமிசல் அருகில் உள்ள சிறுகடவாக்கோட்டை பொன்னமங்கலம் கிராமத்தில் புதுக்கோட்டை தெற்கு மாவட்ட தி.மு.க. விவசாய அணி அமைப்பாளரும், ஆவுடையார்கோயில் ஒன்றியக் கவுன்சிலருமான பொன்பேத்தி சுந்தரபாண்டியன் என்பவருக்குச் சொந்தமான தென்னந்தோப்பு உள்ளது. அந்தத் தோப்பில் இரவு நேரங்களில் பெரிய அளவில் சூதாட்டம் நடப்பதாக மீமிசல் போலிசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. புதுக்கோட்டை, தஞ்சை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களைச் சேர்ந்த பலரும் லட்சக்கணக்கான பணத்துடன் சூதாட வந்து செல்வதாகக் கூறப்படுகிறது.

 

மாவட்ட எஸ்.பி. பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் நேற்று இரவு மீமிசல் காவல் ஆய்வாளர் பாஸ்கரன் உள்ளிட்ட கிரைம் டீம் போலிசார், சுந்தரபாண்டியனின் தென்னந்தோப்பிற்குச் சென்றுள்ளனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டம் நடந்துள்ளது. சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த தி.மு.க. ஒன்றியக் கவுன்சிலர் சுந்தரபாண்டியன், மின்னாமொழி சாகுல் ஹமீது மகன் பசீர் முகமது (34) மற்றும் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த மேலும் 14 பேர் என 16 பேர் கைது செய்தனர். அதோடு, சூதாட்டத்தில் பயன்படுத்திய ரூ.13,62,780 பணமும் கைப்பற்றப்பட்டது. தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சொந்த பிணையில் அனுப்பி வைக்கப்பட்டனர்.


இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

 

 

சார்ந்த செய்திகள்