தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் சொத்து வரிகள் உயர்த்தப்படுவதாக நேற்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது. சென்னை உள்ளிட்ட 21 மாநகராட்சிகளில் சொத்து வரி விகிதங்கள் 25 சதவீதம் முதல் 150 சதவீதம் வரை உயர்த்தப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளன. அதிமுக வரும் ஏப்ரல் ஐந்தாம் தேதி சொத்து வரி உயர்வு அரசாணையை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தை அறிவித்துள்ளது. இந்நிலையில் சென்னையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், “பொருளாதார நிபுணர்கள் ஒன்பது பேரை நியமித்திருக்கிறார்கள். அவர்கள் கொடுத்த அறிக்கையே இந்த சொத்துவரியை உயர்த்தவேண்டும் என்பது தான். அதேபோல், தேர்தல் வாக்குறுதியில் மின்கட்டணம் கணக்கீடு மாதம் ஒரு முறை நடக்கும் எனத் தெரிவித்தனர். ஆனால், அதனையும் நடைமுறைப்படுத்தவில்லை. 25%ல் இருந்து 150% வரை உயர்த்தினால் மக்கள் தாங்குவார்களா. அதையும் இரவோடு இரவாக செய்திருக்கிறார்கள். மக்களுக்கு சுமையைக் கொடுக்காமல் நிர்வாகம் செய்வதுதான் சாமர்த்தியம். பொருளாதார மேதைகளை நியமித்ததில் என்ன பலன் இருக்கிறது. அவர்களை நியமித்து 300 நாட்களாகிறது. ஆனால், ஒரு முன்னேற்றமும் இல்லை. இந்த ஆட்சி போகும் போக்கைப்பார்த்தால், 2026ல் இந்த ஆட்சியால் கடன் இன்னும் 5 இலட்சம் கோடியாக உருவாகும்” என்று தெரிவித்தார்.