திமுக தலைவர் ஸ்டாலின் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலம் நடக்கும் நிவாரண பணிகள் குறித்து மா.செ.க்களுடன் காணொலி வழியாக அண்மையில் ஆலோசனை நடத்தினார். அப்போது பெரும்பாலான மா.செ.க்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட அசைன்மென்ட்டை சரியாகச் செய்வதாக புள்ளி விபரங்களோடு சொன்னார்கள். சென்னை மேற்கு மா.செ.வான ஜெ.அன்பழகன் ‘2021-ல் நம்ம தி.மு.க.தான் ஆட்சியைப் பிடிக்கும். நம் உழைப்பும், மக்களுக்கு நம்மீது இருக்கும் நம்பிக்கையும் இயல்பாகவே நம்மை ஜெயிக்க வைத்து, கட்சித் தலைவரை முதல்வர் சீட்டில் அமர வைக்கும். எனவே நமக்கு அரசியல் வியூகம் வகுக்கும் ஐபேக் கம்பெனி எல்லாம் எதுக்கு? வேணும்னா உங்க ஆபீசுக்கு வேலை செய்யட்டும். எங்ககிட்ட வேலை வாங்க வேணாம். நான் அரசியலுக்கு வந்தபோது பிறக்காத சின்ன சின்ன பையன்கள் கூட ஐபேக்கில் இருந்து கொண்டு எங்களிடம் அதிகாரம் செலுத்துகிறார்கள் என்று கோபத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் தொண்டர்களின் பலத்தால் சோதனைகளையும், நெருக்கடிகளையும் எதிர்கொண்ட கட்சியான தி.மு.க.வில், ஆலோசனை டீம் என்கின்ற பெயரில் முகம் தெரியாத ஆட்கள் நெருக்கடி தருவதை கட்சி நிர்வாகிகள் விரும்பவில்லை. பல மா.செ.க்களின் மனநிலையும் இதுதான். அதை ஜெ.அன்பழகன் எடுத்து கூறியபோது, மற்ற மா.செக்கள் எந்த எதிர்ப்புக்குரலும் எழுப்பாமல், அமைதியாக ஆமோதித்துள்ளார்கள். எல்லாத்தையும் கவனமாக கேட்ட ஸ்டாலின், ஐபேக் நிறுவனம் என்பது கள நிலவரம் தொடர்பான புள்ளி விவரங்களை திரட்டத்தான் பயன்படுத்தப்படும். கட்சி நிர்வாகத்திலோ, வேட்பாளர் தேர்விலோ அதற்கு வேலை இல்லை என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.