பிரதமர் மோடியின் தாயார் ஹீராபெண் மறைவிற்கு நேரில் சென்று பிரதமருக்கு ஆறுதல் தெரிவிக்க முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மதுரையில் இருந்து குஜராத் புறப்பட்டார்.
முன்னதாக இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், “மாநில தேர்தல் ஆணையம் ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என கடிதம் எழுதியுள்ளது. அதிமுகவில் கழக சட்ட விதிப்படி கழகத்தின் தேர்தல் நடத்தப்பட்டது. இந்த தேர்தலில் கழகத்தின் தொண்டர்கள் மூலமாக கழகத்தின் ஒருங்கிணைப்பாளராக என்னையும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியையும் தேர்ந்தெடுத்தார்கள். இது தான் உண்மை. இடையில் பல்வேறு பிரச்சனைகளை அவர்கள் செயற்கையாக உருவாக்கினால் அதற்கு நான் பதில் சொல்ல தேவையில்லை.
இந்திய தேர்தல் ஆணையம் முறையாக ஒவ்வொரு கடிதத்திலும் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் என்று தான் குறிப்பிடுகிறது. அவர்கள் ஏற்றுக்கொண்டுதான் கழக அமைப்பு ரீதியான தேர்தலை அவர்கள் நடத்த சொல்லி கிளைக்கழகத்தில் இருந்து தேர்தல்களை நடத்தினோம்.
மத்திய அரசு அவரை மட்டுமே குறிப்பிட்டு கடிதம் எழுதவில்லை. இந்திய தேர்தல் ஆணையம் என்ன முடிவெடுக்கிறதோ அதைத்தான் மத்திய அரசு நடைமுறைப்படுத்துகிறது. பொதுச்செயலாளர் என குறிப்பிட்டு கடிதம் வருவது தவறான தகவல்.
தமிழக விவசாயிகள் இந்த வருடமும் கரும்பு வழங்குவார்கள் என்று நம்பி தான் பயிரிட்டார்கள். அதற்கு மாறாக கரும்பு இல்லை என்ற நிலை வரும் போது அவர்கள் போராட்டம் அறிவித்தார்கள். அதை ஏற்று தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
பொங்கல் தொகுப்பில் 5000 கொடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி சொன்னதாக சொல்கிறார்கள். நான் தான் முதலில் அதை கூறினேன்” எனக் கூறினார்.