எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் தலைமையில் கடந்த 21.09.2020 தேதி அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில், நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட வேளாண் தொடர்பான, வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசியப் பொருட்கள் திருத்த மசோதா ஆகியவற்றை திரும்பப்பெற வலியுறுத்தியும் - ஆதரவு தெரிவித்த அ.தி.மு.க அரசைக் கண்டித்தும், மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை 28.09.2020 (திங்கட்கிழமை) காலை 10.00 மணிக்கு நடத்துவதாகத் தீர்மானிக்கப்பட்டது. இதில் காங்கிரஸ், இடதுசாரிகள், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் பங்கேற்கின்றன.
அதன்படி இன்று காஞ்சிபுரம் – கீழம்பி கிராமத்தில் திமுகவின் தலைவரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மு.க.ஸ்டாலின், “கடந்த 22-ம் தேதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டம் - நகரம் - ஒன்றியம் – பேரூர்களில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள் - முன்னணியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது என முடிவெடுக்கப்பட்டது. கூட்டணிக் கட்சிகளின் முன்னணித் தலைவர்கள், தொண்டர்கள், செயல்வீரர்கள் மற்றும் அந்தந்தப் பகுதிகளில் உள்ள விவசாயிகள் கரோனா கால விதிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள். நமது கழகத்தை 70 மாவட்டங்களாகப் பிரித்திருக்கிறோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஒவ்வொரு இடத்திலும் 100 பேருக்கு மிகாமல் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்றால் கிட்டத்தட்ட 3,50,000 பேர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
விவசாயிகளின் வயிற்றில் அடிக்கிறது மத்திய அரசு என்றால்; மாநில அரசு விவசாயிகளைக் காலில் போட்டு மிதிக்கிறது. இருவரும் சேர்ந்து வஞ்சிப்பதை மக்களுக்கு எடுத்துச் சொல்லத்தான் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
மத்தியில் ஒருவர் பிரதமராக இருக்கிறார். அவர் தன்னை ‘ஏழைத் தாயின் மகன்’ என்று சொல்லிக் கொள்கிறார். இந்த ஏழைத்தாயின் மகன் ஆட்சிக்கு வந்த பிறகுதான் ஏராளமான இந்திய மக்கள் ஏழைகள் ஆனார்கள். புதிது புதிதாக ஏழைகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் ஏழைத்தாயின் மகன்.
மாநிலத்தில் ஒருவர் முதலமைச்சராக இருக்கிறார். அவர் தன்னை ‘விவசாயி’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்கிறார். அவர் ஆட்சிக்கு வந்த பிறகு தான் விவசாயிகளின் வாழ்க்கையே பறிபோய் கொண்டிருக்கிறது. ஏழைத் தாயின் மகனும், இந்த விவசாயியும் சேர்ந்து ஏழை மக்களுக்கோ, விவசாயிகளுக்கோ எந்த நன்மையும் செய்யவில்லை; தொடர்ந்து விவசாயிகளுக்கு விரோதமான செயல்களை, கெடுதல்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அதனை போட்டி போட்டுக் கொண்டு செய்கிறார்கள்.” என்று கண்டனம் தெரிவித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் காஞ்சிபுரத்தில் நடவு செய்துகொண்டிருந்த விவசாய பெண்களை கழனியில் இறங்கி சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டு, பொதுமக்களுடனும் கலந்துரையாடினார் ஸ்டாலின்.