“அண்ணாமலை நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி ஊழலற்ற கட்சியா?” என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை, திருச்சுழி, சாத்தூர் சட்டமன்ற தொகுதிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நாம் தமிழர் கட்சி சார்பில் நடந்தது. இக்கூட்டத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமை தாங்கினார்.
நிகழ்வு முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “எங்களைப் பொறுத்தவரை அனைத்து மதுக்கடைகளையும் மூட வேண்டும். நான் விசாரித்த வரை சரியாக வியாபாரம் நடக்காத கடைகளை மூடியதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள பாஜகவினர் ஊழல் செய்யவில்லை என்பதை ஏற்கலாம். ஏனெனில் இதுவரை அவர்கள் ஆட்சியில் இல்லை. ஆனால் இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் ஆள்கிறார்கள். இந்தியாவையும் ஆள்கிறார்கள். அவர்கள் ஊழல் இல்லை என்று சொல்ல முடியாது.
என்னைப் பொறுத்தவரை, நான் அறிந்த வரை அண்ணாமலை நேர்மையான அதிகாரி. அவர் இருக்கும் கட்சி ஊழலற்ற கட்சியா. ஒருவன் அதிகாரத்திற்கு வந்த பிறகு ஊழலற்று இருப்பது தான் சாதனை. திமுக அமைச்சர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை நாம் வரவேற்றாலும் காலம் கடந்தது. காலம் கடந்து நீங்கள் ஒன்றை செய்யும் போது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று தான் பார்க்க முடிகிறது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கே ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் நடந்த குற்றம் அது. நீங்கள் நேர்மையானவராக இருந்தால் அந்த காலகட்டத்திலேயே நடவடிக்கை எடுக்க வேண்டும் அல்லவா. கேட்டால் நீதிமன்றம் இப்போது தான் உத்தரவிட்டதாக சொல்கிறீர்கள். நான் நீதிமன்றத்தையும் சேர்த்து தான் சொல்கிறேன். குற்றச்சாட்டு வராமல் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்காமல் உங்களுக்கு தேவையான நேரத்தில் நடவடிக்கை எடுப்பது அரசியல் நெருக்கடி, பழிவாங்கல்” எனக் கூறினார்.