அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான தேதி கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டு, நேற்று சனிக்கிழமை இ.பி.எஸ். மனு தாக்கல் செய்துள்ளார். இ.பி.எஸ். மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால், இன்று வேட்புமனு தாக்கல் நிறைவடைந்ததும் அவர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்படுவார் என சொல்லப்பட்டுவந்தது. இந்நிலையில், நேற்று சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி முன்னிலையில் மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ., சார்பில் ‘அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும். இதனை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும்’ என முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணை வரவுள்ளது.
இந்நிலையில், இ.பி.எஸ். அணி சார்பிலிருந்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று (19ம் தேதி) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “ஓ.பி.எஸ்., பண்ருட்டி ராமச்சந்திரன் ஆகியோரின் பேட்டியை விரக்தியின் உச்சமாகத்தான் நான் பார்க்கிறேன். ஓ.பி.எஸ். பிக்பாக்கெட் என்கிறார். ஒவ்வொரு அதிமுக தொண்டனும் கோயிலாக பார்க்கும் எம்.ஜி.ஆர். மாளிகையை (அதிமுக தலைமை அலுவலகம்) ஓ.பி.எஸ். தலைமையில் குண்டர்கள் வந்து சூறையாடியது தான் பிக்பாக்கெட். இதனை நாங்கள் நீதிமன்றத்திற்கு எடுத்து சென்று அவர் மீது கிரிமினல் வழக்கு போடப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தன்னிடம் இருந்து ஓ.பி.எஸ். அமைச்சர் பதவியை பிடுங்கிக்கொண்டார் என்று தெரிவித்துள்ளார். அதேபோல், பதவி வெறியில் என்னிடம் இருந்து நிதித்துறையை பிடுங்கினார். இதுவெல்லாம் தான் பிக்பாக்கெட்.
கட்சியின் நலனுக்காக அவர் எந்தக் காலத்திலாவது செயல்பட்டுள்ளாரா. ஆரம்ப காலத்தில், அவருக்கு எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவை தெரியாது. அவரைப் பொறுத்தவரையில் அவரின் தலைவர்கள், வி.கே. சசிகலாவும், டி.டி.வி. தினகரனும்தான்.
தன் உடல் நலம் பாராமல் தமிழ்நாடு முழுக்க சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஜெயலலிதா அதிமுகவை அரியணையில் ஏற்றினார். பின் ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு ஆட்சியை கவிழ்க்க நினைத்தால் அது எவ்வளவு பெரிய மாபெரும் துரோகம். எடப்பாடி, சிறப்பான ஆட்சி நடத்திக்கொண்டிருந்தபோது, திமுக கொண்டுவந்த தீர்மானத்திற்கு ஒத்து ஊதினார். ஆனால், எடப்பாடி அவற்றையெல்லாம் மறந்துவிட்டு, ஜெயலலிதா ஆட்சி தொடர வேண்டும் என எண்ணி அவரை கட்சியில் சேர்த்தார். அப்போது அவர் (ஓ.பி.எஸ்.) ஜெயலலிதாவின் மரணத்தில் அந்தக் குடும்பத்தின் மீது சந்தேகம் இருக்கிறது விசாரணை கமிஷன் போடவேண்டும் என்றார். அதை ஏற்ற எடப்பாடி விசாரணை கமிஷன் அமைத்தார்.
விசாரணை கமிஷன் அமைக்கச் சொன்ன அவருக்கு பல முறை கமிஷனிலிருந்து சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை. கடைசியில் தான் சென்றார். அப்போது கமிஷனில் ‘ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்றார். இது எவ்வளவு பெரிய முரண்.
அதேபோல், 22 தொகுதிகளுக்கு இடைத் தேர்தல் வந்தது. அதில், 10 அல்லது 9 தொகுதிகளில் அதிமுக வென்றால் தான் ஆட்சியை தக்கவைக்கமுடியும். அந்தத் தேர்தலில் எதிர் கட்சி பணமெல்லாம் செலவழித்தாலும், அதையெல்லாம் மீறி நாங்கள் 9 இடங்களில் வென்று ஆட்சியை தக்கவைத்தோம். அந்த 22ல் பெரியகுளமும், ஆண்டிபட்டியும் அடக்கம். அதில் உங்களால் வெற்றி பெற முடிந்ததா. நாடாளுமன்றத்துடன் சேர்ந்து நடைபெற்ற அந்த இடைத் தேர்தலில் தன் மகன் மட்டும் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற வேண்டும் என கோடிக்கணக்கான ரூபாயை செலவு செய்து அவரது மகனை வெற்றி பெறவைத்து, இடைத் தேர்தல் நடந்த இரண்டு சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை தோற்கடிக்கிறார். அதன்பிறகு வந்த பொதுத் தேர்தலில் அவரின் மாவட்டத்தில் அவர் மட்டுமே வெற்றி பெறுகிறார். மற்றவர்களை வெற்றி பெறவைத்தாரா. அவரை பொறுத்தவரையில் கட்சி எப்படி போனாலும், அவருக்கு எடப்பாடி முதல்வராக வரக்கூடாது என எண்ணம்.
ஆமை புகுந்த வீடு உருப்படாது என்பார்கள். அதுபோல், பண்ருட்டியார் போன எந்தக் கட்சியாவது உருப்பட்டிருக்கிறதா. அவர் ஓ.பி.எஸ்.ஸிடம் எவ்வளவு பணம் வாங்கினார் என்பது தெரியவில்லை. அந்தப் பணத்திற்கு கை கூலியாக, எடப்பாடியையும், தலைமைக் கழக நிர்வாகிகளையும் தரக்குறைவாக பேசியுள்ளார். வயதானவர் பேச்சில் ஒரு அளவு வேண்டாமா. அவருக்கும் அதிமுகவுக்கும் சம்பந்தமே கிடையாது. மகாபாரதத்தில் எப்படி சகுனியோ அதுபோல், அரசியலில் பண்ருட்டி ராமச்சந்திரனை சகுனி என சொல்லலாம். எடப்பாடியின் எழுச்சியை ஓ.பி.எஸ்.ஆல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை” என்று தெரிவித்தார்.