சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து 11ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பா.ஜ.க செயற்குழு உறுப்பினரும், தேசிய பெண்கள் ஆணையத்தின் உறுப்பினருமான குஷ்பு கலந்துகொண்டு உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து குஷ்பு செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் பேசுகையில், “தமிழகத்தில் எவ்வளவு போதைப்பொருட்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருட்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது. இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர். இதற்கு முதலமைச்சர் என்ன பதில் கொடுக்கப்போகிறார். இன்றைக்கு தாய்மார்களுக்கு 1000 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சை போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?” எனப் பேசினார். குஷ்புவின் இந்த பேச்சு பொதுமக்கள் மற்றும் பெண்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், காங்கிரஸ் எம்.பி ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று (13-03-24) செய்தியாளர்களைச் சந்தித்து பேசினார். அப்போது அவர், “பிரதமர் மோடி, ஒரு சர்வாதிகாரியாக செயல்பட்டு வருகிறார். எப்படியாவது தமிழ்நாட்டு மக்களை மயக்கி, அவர்களிடம் வாக்குகளை பெற்று தமிழகத்தில் டெபாசிட்டாவது வாங்க வேண்டும் என்று முயற்சியில் பிரதமர் மோடி ஈடுபட்டு வருகிறார். நாட்டு மக்கள் தன்னுடைய குடும்பம் என்று சொல்லக்கூடிய மோடிக்கு நான் சவால் விடுகிறேன். முடிந்தால், தமிழகத்தில் ஏதாவது ஒரு தொகுதியில் நின்று டெபாசிட் வாங்கினால் உங்களை நாங்கள் பிரதமராக ஏற்றுக்கொள்கிறோம்.
மகளிருக்கு வழங்கப்படும் உரிமைத் தொகையை பிச்சை காசு என்று குஷ்பு சொல்கிறார். பிச்சை எடுப்பதில் குஷ்பு ஆர்வமாக இருக்கிறார். விரைவில் அவருக்கு அந்த நிலைமை வரும். பொய், பித்தலாட்டத்தின் மொத்த உருவமே மோடி தான். போதை பொருட்கள் எங்கிருந்து வருகிறது என்றால், குஜராத்தில், மோடியின் நண்பரான அதானியின் துறைமுகத்தில் இருந்து தான் இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது.