Published on 18/06/2019 | Edited on 18/06/2019
ஈரோடு மாவட்டத்தில் விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைத்து வருகின்றனர்.இதற்கு அப்பகுதி விவசாய மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். உயர்மின் கோபுரங்கள் அருகே சென்றாலோ, அதன்கீழ் விவசாய பணிகளில் ஈடுபட்டாலோ மின்காந்த புலன் பாய்ந்து பாதிப்புகள் ஏற்படும் என்றும் மின்கசிவு ஏற்படுவதாகவும் விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். மின்சாரத்துறை விவசாயிகள் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைத்து வருகின்றனர். இதனால் விவசாயிகள் ஈரோடு தொகுதி எம்.பி. கணேசமூர்த்தியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்த நிலையில் ஈரோடு எம்.பி.கணேசமூர்த்தி நேற்று ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே உள்ள மூணாம்பள்ளி என்ற இடத்தில் அமைக்கப்பட்டுள்ள உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்று ஆய்வு செய்தார்.
அப்போது உயர்மின் கோபுரத்தின் கீழ் பகுதியில் மின்சாரம் பாய்கிறதா? என்பதை கண்டறிய தன்னுடைய உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தார். அப்போது அவரது உடலில் மின்சாரம் பாய்கிறது என்பதை அறிந்த அப்பகுதி மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.உடனே அவரது உடலில் மின்சாரம் பாய்வதை எம்.பி.கணேசமூர்த்தி போட்டோ எடுத்து கொண்டார். இதுகுறித்து அவர் கூறும்போது, 'உயர்மின் கோபுரத்தின் கீழ் நின்றுகொண்டு உடலில் டெஸ்டரை வைத்து பார்த்தால் மின்சாரம் பாய்ந்து விளக்கு எரிகிறது. இதை அறிக்கையாக தயாரித்து நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளேன். மேலும் இதுகுறித்த புகைப்படங்களை பாராளுமன்றத்தில் அனைவருக்கும் எடுத்து காமித்து இது குறித்து பேசுவேன் என்று கூறினார். மத்திய சுற்றுச்சூழல் துறை மந்திரி, மின்சாரத்துறை மந்திரியிடமும் இதை கொண்டு செல்லப் போகிறேன்' என்றார்.