ஈரோடு கிழக்கில் அதிமுக போட்டியிட ஜி.கே. வாசன் சம்மதம் தெரிவித்துவிட்டார். போட்டியிடுவது குறித்து எடப்பாடியிடம் வாசன் விவாதித்தபோது, "கூட்டணி தர்மத்தை மதித்து த.மா.கா.வுக்கு மீண்டும் வாய்ப்புத் தருகிறோம். அதே கூட்டணி தர்மத்தை மதித்து தேர்தல் செலவு முழுவதையும் நீங்கள்தான் ஏற்க வேண்டும். எப்படிப் பார்த்தாலும் குறைந்தபட்சம் 10 கோடி செலவாகும்" என்று எடப்பாடி தெரிவித்திருக்கிறார். இதனையடுத்து ஈரோடு மாவட்ட த.மா.கா.வினரிடம் வாசன் ஆலோசித்ததில் யுவராஜா உட்பட யாருமே தேர்தல் செலவை ஏற்க முன்வரவில்லை. "கட்சியிலிருந்து உதவி செய்தால் போட்டியிடலாம்" என சொல்லிவிட்டதால் கோடிகளில் செலவு செய்ய த.மா.கா.வில் ஆள் இல்லை. அதனால், அதிமுகவே போட்டியிட சம்மதம் தெரிவித்திருக்கிறார் வாசன். த.மா.கா. தேர்தல் செலவை சுட்டிக்காட்டி, ஜி.கே.வாசனை அதிமுகவிற்கான ஆதரவு நிலையை எடுக்க வைத்ததும், பாஜக பக்கம் வாசன் செல்லாமல் தடுத்து நிறுத்தியதும் எடப்பாடியின் ராஜ தந்திரமாகவே பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் பா.ஜ.க. தனித்து போட்டியிடுவதும் கேள்விக்குறியாகியிருக்கிறது. இடைத்தேர்தலில் அதிமுக களமிறங்குவதால் ஓ.பி.எஸ்.சின் சூழ்ச்சியால் இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும், கிடைக்கும் சின்னத்தில் போட்டியிட்டு அதிக அளவு வாக்குகளைப் பெற்று எடப்பாடி தலைமையிலான அதிமுக தான் உண்மையான அதிமுக என்பதை நிரூபிக்கவும் எடப்பாடி தரப்பில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இப்படிப்பட்ட பரபரப்பான சூழலில், என்ன செய்வது என்கிற குழப்பத்தில் ஓ.பி.எஸ். இருப்பதாக சொல்லப்படுகிறது. இது குறித்து 23ந் தேதி ஓ.பி.எஸ். கூட்டும் மா.செ.க்கள் கூட்டத்தில் ஒரு தெளிவு கிடைக்கும் என்கிறார்கள்.
ஒருவேளை தேர்தலில் பாஜக தனித்து போட்டியிட்டு, அப்போது பா.ஜ.க.வை ஓ.பி.எஸ். ஆதரித்தால் அவர் அ.தி.மு.க.வினராலேயே அந்நியப்பட்டுப் போவதற்கான வாய்ப்புகளும் உண்டு. அதேசமயம், தேர்தலில் ஓ.பி.எஸ். ஒரு வேட்பாளரை களமிறக்கி அவர் குறைவாக ஓட்டுக்களை பெற்றால் அப்போது ஓ.பி.எஸ்.சின் இமேஜ் அதல பாதாளத்துக்கு செல்வதுடன் கட்சியிலிருந்து முற்றிலும் ஒதுக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது.
ஈரோடு கிழக்கு தொகுதி, கொங்கு மண்டல கோட்டை என்றாலும் அதிமுகவுக்கு வெற்றி கிடைக்காமல் போகும் பட்சத்தில் எடப்பாடி தரப்பே அதிக வாக்குகள் பெற்று இரண்டாவது பொசிஷனுக்கு வருகிற நிலையில், 'தாங்கள் தான் உண்மையான அதிமுக ' என்பதை நிரூபிக்க, இடைத்தேர்தலை வாய்ப்பாக பயன்படுத்த நினைக்கிறார் எடப்பாடி பழனிசாமி.
இதற்கிடையே, பா.ஜ.க. தனித்துப்போட்டி என்கிற அண்ணாமலையின் அதிரடிக்கு பா.ஜ.க.வின் டெல்லி மேலிடம் ஆதரவு தரவில்லை என்பதாகவும் செய்தி கசிகிறது. அதாவது, தனித்துப் போட்டி என்பது அண்ணாமலையின் எண்ணம் மட்டுமே. ஆகவே தனித்துப்போட்டி அறிவிப்பை அண்ணாமலை வாபஸ் பெற்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அப்படி ஒரு சூழல் உருவானால், ஓ.பி.எஸ். நிலை திரிசங்கு சொர்க்கம் தான்.