ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. எடப்பாடி அணி சார்பில் முன்னாள் எம்.எல்.ஏ. தென்னரசு, ஓ.பி.எஸ் அணி சார்பில் செந்தில் முருகன், அ.ம.மு.க சார்பில் சிவபிரசாந்த், தே.மு.தி.க சார்பில் ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தற்போது வரை 6 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31 ஆம் தேதி தொடங்கியது. ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் அரசியல் கட்சியினர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன.
முதல் நாளில் சுயேச்சைகள் பலர் ஆர்வத்துடன் வேட்புமனு தாக்கல் செய்ய வந்தனர். முதல் நாளில் 4 சுயேச்சைகளின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2-வது நாள் வேட்புமனு தாக்கல் நடைபெற்றது. இதில் தே.மு.தி.க. வேட்பாளர் ஆனந்த் உட்பட 6 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து 2ந் தேதியான 3-வது நாளாக நடந்த வேட்புமனு தாக்கல் நடந்தது. இதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா உள்பட 10 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பேரின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 3ந் தேதி 4-வது நாளாக வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இன்று முக்கியக் கட்சிகளின் வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வருவதால் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் செய்யப்பட்டிருந்தன.
இன்று மதியம் 1.30 மணியளவில் ஓ.பி.எஸ் அணி சார்பில் வேட்பாளர் செந்தில் முருகன் முக்கியத் தலைவர்களுடன் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார். 12:10 மணி அளவில் திமுக கூட்டணி கட்சி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காங்கிரஸ், திமுக மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களுடன் திரண்டு வந்து மனுத்தாக்கல் செய்ய வந்தார். மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து 200 மீட்டர் தொலைவில் கூட்டணி கட்சி தலைவர்கள் நிறுத்தப்பட்டு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் முக்கியமான 5 நிர்வாகிகள் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். பின்னர் மாநகராட்சி அலுவலர்கள் சான்றிதழை சரி பார்த்தனர். அதனைத் தொடர்ந்து இளங்கோவன் வேட்புமனு தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து அ.ம.மு.க. வேட்பாளர் சிவபிரசாந்த் நிர்வாகிகளுடன் வேட்புமனு தாக்கல் செய்ய திரண்டு வந்தார். பின்னர் வேட்பாளர் சிவபிரசாத்துடன் முக்கியத் தலைவர்கள் 5 பேர் மட்டும் மாநகராட்சி அலுவலகத்திற்குள் வந்தனர். சான்றிதழ் சரிபார்த்த பிறகு சிவபிரசாந்த் மாநகராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமாரிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
ஒரே நாளில் முக்கியக் கட்சி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல் செய்ய வந்ததால் மாநகராட்சி அலுவலகம் பரபரப்பாக காணப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டவுன் டிஎஸ்பி அனந்தகுமார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் மாநகராட்சி அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். இதன் காரணமாக இன்று மீனாட்சி சுந்தரனார் சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது. மாநகராட்சி அலுவலகத்திற்குள் கடும் சோதனைக்கு பிறகே ஊழியர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் அனுமதிக்கப்பட்டனர்.