Skip to main content

கைமாறிய குக்கர் மற்றும் டார்ச் லைட் சின்னம்

Published on 11/02/2023 | Edited on 11/02/2023

 

Erode East by-election; Interchangeable cooker and torchlight symbol

 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தற்போது பரபரப்பு கட்டத்தை எட்டியுள்ளது. திமுகவும் கூட்டணிக் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. அமைச்சர்கள், நிர்வாகிகள் ஆகியோரை ஈரோட்டில் முகாமிட வைத்து, கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய மிகத் தீவிரமாக களத்தில் இறங்கியுள்ளது திமுக. மறுபுறம் அதிமுக, இரட்டை இலை மற்றும் பிற நீதிமன்ற களேபரங்கள் அனைத்தையும் முடித்து வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தை நடத்தி, தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. 

 

இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. வரும் 27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், வேட்புமனுத் தாக்கல் கடந்த ஜனவரி மாதம் ஆரம்பித்து பிப்ரவரி 7 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் மொத்தம் 121 வேட்புமனுக்கள் பெறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நடந்த வேட்புமனு பரிசீலனையில் 83 வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டன. காங்கிரஸ், அதிமுக, தேமுதிக உள்ளிட்ட அரசியல் கட்சிகள், சுயேச்சை வேட்பாளர்கள் 83 பேர் இந்த பட்டியலில் இருந்தனர். வேட்புமனுக்களை திரும்பப் பெற நேற்று மாலை 3 மணி வரை அவகாசம் வழங்கப்பட்டது.

 

இந்நிலையில், நேற்று மாலை வேட்புமனு பரிசீலனை நிறைவு பெற்றது. 83 வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு இருந்த நிலையில், அமமுக வேட்பாளர் சிவபிரசாந்த், சுயேச்சைகள் என மொத்தம் 6 பேர் வேட்புமனுக்களை திரும்பப் பெற்றனர். 77 பேர் இறுதி வேட்பாளர் பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். ஈரோடு கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தலை நடத்தும் அலுவலர் சிவக்குமார் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களின் இறுதிப்பட்டியலை நேற்று மாலை வெளியிட்டார். அதிகாரப்பூர்வ வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பின் வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு கிழக்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்களாக மூவர் உள்ளனர். காங்கிரஸ், அதிமுக, தேமுதிக வேட்பாளர்கள் ஆகியோர் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர்கள். 

 

இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு என்றும் தெரிவித்த நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச்லைட் சின்னம் சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. அதேபோல் தேர்தலில் இருந்து வாபஸ் பெற்ற அமமுக வேட்பாளர் மற்றும் அமமுக கட்சியினர் கேட்ட குக்கர் சின்னமும் சுயேச்சை வேட்பாளருக்கு ஒதுக்கப்பட்டது. இதில் மக்கள் நீதி மய்யத்தின் டார்ச் லைட் சின்னம் விஸ்வபாரதி மக்கள் கட்சியின் வேட்பாளர் வேலுமணிக்கு ஒதுக்கப்பட்டது. 

 

 

சார்ந்த செய்திகள்