Skip to main content

இனிமேல் ராஜேந்திர பாலாஜிக்கு பதில் இவர் தான்... அமைச்சருக்கு எதிராக எடப்பாடியின் அதிரடி திட்டம்... கலக்கத்தில் அமைச்சர்! 

Published on 17/04/2020 | Edited on 17/04/2020


ஏற்கனவே, ‘திண்ணை எப்ப காலியாகும்?’ என்ற மனநிலையில்தான் இருந்தார்கள், விருதுநகர் மாவட்ட ஆளும்கட்சி புள்ளிகள். அதுபோல், அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி வசம் இருந்த மாவட்டச் செயலாளர் பொறுப்பு பறிக்கப்பட்டதும், ‘அடுத்த மாவட்டச் செயலாளர் யார்?’ என்ற எதிர்பார்ப்பில், தலைமையின் தேர்வு இவராகத்தான் இருக்கும்’என்று ஆரூடம் சொல்லி வருகிறார்கள், இம்மாவட்டத்தில். அவர்களின் கூற்றுபடி, மாவட்டச் செயலாளர் பட்டியலில் வரிசை கட்டி நிற்பவர்களைப் பார்ப்போம்.

 


ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.வும், தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொல்லியல்துறை அமைச்சருமான மாஃபா பாண்டிய ராஜன் பெயர் பலமாக அடிபடுகிறது. காரணம், அவர் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதே. விருதுநகர் தொகுதி தே.மு.தி.க. எம்.எல்.ஏ.வாக இருந்துவிட்டு அ.தி.மு.க. பக்கம் வந்தபோது, கே.டி.ராஜேந்திரபாலாஜி காட்டிய தீவிரத்தால் இந்த மாவட்டத்திலிருந்தே ஓரம் கட்டப்பட்டார், பாண்டியராஜன். தர்மயுத்தம் நடத்தியபோது ஓ.பி.எஸ். ஆதரவு நிலை எடுத்த தன்னை, பெயரளவுக்கே அமைச்சராக்கியிருக்கிறார் எடப்பாடி என்னும் ஆதங்கத்தில் இருந்துவரும் இவர், விருதுநகர் மா.செ. பொறுப்பு தன்னைத் தேடிவரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்.

 

 

admk



‘சென்னையே தனக்கு போதுமானது, மீண்டும் விருதுநகர் செல்ல வேண்டுமா? அந்த மாவட்ட அரசியல் தனக்கு சரிப்படுமா?’ என்ற சந்தேகம் ஒருபக்கம் இருப்பதால், இவர் பெரிதும் எதிர்பார்ப்பது அமைச்சரவையில் கூடுதல் இலாகாதான். அதாவது, கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமிருந்து அமைச்சர் பொறுப்பும் பறிக்கப்பட்டு, ஆவின் அமைச்சர் என்ற கூடுதல் பொறுப்பு தனக்கு வந்துசேர வேண்டும் என்பதுதான். பாண்டியராஜன் விருதுநகர் மாவட்டச் செயலாளர் ஆவாரா? ஆவின் அமைச்சர் ஆவாரா? என்ற எதிர்பார்ப்பு அவருடைய விருதுநகர் மாவட்ட விசுவாசிகளிடம் எகிறிக்கிடக்கிறது.

 

http://onelink.to/nknapp


ஓ.பன்னீர்செல்வத்தின் பலத்த சிபாரிசு தனக்கிருப்பதாகச் சொல்லி வருகிறார், முன்னாள் சிவகாசி எம்.எல்.ஏ.வான பாலகங்காதரன். கே.டி.ராஜேந்திரபாலாஜி மாவட்ட செயலாளராக இருந்தும், அவரை மீறி திருச்சுழி தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பினை தலைமையிடமிருந்து பெற்ற தினேஷ்பாபுவும் இப்பட்டியலில் உள்ளார். முன்னாள் அருப்புக்கோட்டை எம்.எல்.ஏ. வைகை செல்வனும் நம்பிக்கையோடு இருக்கிறார். சாத்தூர் எம்.எல்.ஏ. ராஜவர்மன் பெயர் அடிபட்டாலும், ராஜவர்மனை மாவட்டச் செயலாளர் ஆக்கினால், அது கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு சாதகமாகிவிடும் என்ற கணக்கினை அறிந்து வைத்திருக்கிறது தலைமை.

எது எப்படியோ, விருதுநகர் மாவட்டத்தில் கே.டி. ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ‘டஃப்’ கொடுப்பவர்களை, அதாவது, அவரால் அரசியல் ரீதியாக பாதிக்கப்பட்டவர்களைத்தான் மாவட்டச் செயலாளர்கள் ஆக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறாராம், எடப்பாடி. அந்த வகையில், விருதுநகர் மாவட்டத்தில் மெஜாரிட்டியாக உள்ள முக்குலத்தோர், நாயக்கர் மற்றும் நாடார் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களான தினேஷ்பாபு, பாலகங்காதரன், பாண்டியராஜன் ஆகியோரில் இருவரே மாவட்டச் செயலாளர்கள் ஆக்கப்படுவார்கள் என்கிறது ஆளும்கட்சி தரப்பு.



விருதுநகர் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து, இரண்டு மாவட்டச் செயலாளர்களை, இந்த கரோனா காலக்கட்டத்திலேயே நியமித்துவிட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறது கட்சித் தலைமை. ஆட்சியே 2021 வரைதான். இடைப்பட்ட காலத்தில் இந்த கரோனா எத்தனை காலத்துக்கு நீடிக்கும் என்பது தெரியவில்லை. இந்த நேரத்தில் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடமிருந்து அமைச்சர் பதவியைப் பறித்து, கட்சிக்கும் ஆட்சிக்கும் எதிராக, அவர் ஏதாவது மதரீதியாக ‘லாபி’ செய்தால், அது விருதுநகர் மாவட்டத்தை மட்டுமல்ல, தமிழக அளவில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றொரு கோணத்திலும் சிந்திக்கிறதாம் கட்சித் தலைமை.

‘அதெல்லாம் கிடையாது. அமைச்சர் பதவியும் அம்பேல்தான்! எடப்பாடி மட்டுமல்ல.. கே.டி.ராஜேந்திரபாலாஜிக்கு எதிராகக் கச்சை கட்டி நிற்கும் மூத்த அமைச்சர்களும், அவரை ஒரேயடியாக வீழ்த்திவிட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அதனால்தான், விருதுநகர் மாவட்டச் செயலாளர் பொறுப்புக்கும், ஆவின் அமைச்சர் பொறுப்புக்கும் பலத்த போட்டி நிலவுகிறது.’ என்று அக்கட்சியினரால் பேசப்பட்டு வரும் நிலையில், ‘நானே மாவட்டச் செயலாளர்! நானே ஆவின் மந்திரி! என்ற கொக்கரிப்பு இம்மாவட்டத்தில் அதிகரித்து வருகிறது.

கே.டி.ராஜேந்திரபாலாஜியோ ‘என்னதான் நடக்கும் நடக்கட்டுமே..’ என்று எடப்பாடியுடனான மோதல் போக்கினை தொடரவே செய்கிறாராம்.

 

சார்ந்த செய்திகள்