சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமையகமான எம்ஜிஆர் மளிகையில் நேற்று (06.11.2024) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி, மூத்த நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணி வியூகம், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்பட்டது.
அதோடு அதிமுகவின் கிளைச் செயலாளர் முதல் பொதுச்செயலாளர் வரையிலான அனைத்து பதவிகளுக்கும் விரைவில் உட்கட்சி தேர்தல் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகி இருந்தது. அதே சமயம் டிசம்பர் மாதத்தில் அதிமுக பொதுக்குழு கூடுவதற்கு முன்பாகவே உட்கட்சி தேர்தலை நடத்தி முடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி இருந்தது. இந்நிலையில் எடப்பாடி பழனிசாமி அதிமுகவில், ‘கள ஆய்வுக்குழு’ ஒன்றை அமைத்து இன்று (07.11.2024) உத்தரவிட்டுள்ளார்.
அந்த உத்தரவில், “அதிமுக கிளை, வார்டு, வட்டம் மற்றும் சார்பு அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து நேரடியாகக் கள ஆய்வு செய்து, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்தான கருத்துகளைப் பெற்றிடவும், புதுப்பிக்கப்பட்ட கட்சி உறுப்பினர் உரிமைச் சீட்டுகள் முழுமையாகக் கட்சி உறுப்பினர்கள் அனைவரிடமும் சென்றடைந்ததா என்பதை உறுதி செய்தும், அதன் விபரங்களை அறிக்கையாக அளிப்பதற்காக, 'கள ஆய்வுக் குழு' அமைக்கப்படுகிறது.
இந்த குழுவினர், கட்சி அமைப்பு ரீதியாகச் செயல்பட்டு வரும் அனைத்து மாவட்டங்களுக்கும் நேரில் சென்று கள ஆய்வு செய்து, அதன் விபரங்களை டிசம்பர் 7ஆம் தேதிக்குள் (07.12.2024) அறிக்கையாகச் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்களான, கே.பி. முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி. சண்முகம், செம்மலை, பா. வளர்மதி மற்றும் வரகூர் அ. அருணாசலம் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.