தமிழ்நாட்டிற்கு தான் வந்தபோது கூடிய பெருங்கூட்டம் ஏன் வாக்குகளாக மாறவில்லை என நரேந்திரமோடி கேட்கும் கேள்விக்கு அமித்ஷாவால் கூட பதில் சொல்ல முடியவில்லை. தமிழகத்தில் எனக்கெதிரான அலை வீசியது என்பது உண்மையென்றால் நான் இந்தியாவில் மற்ற இடங்களில் பேசிய கூட்டங்களைவிட அதிகமான மக்கள் திரள் தமிழகத்தில் பேசிய கூட்டத்திற்கு எப்படி வந்தது என மோடி கேட்ட கேள்விக்கு தமிழக பாஜகவினர் பதில் அளித்துள்ளனர். அந்தப் பதில், புதிய அமைச்சரவை குறித்து கூட்டிய கூட்டத்தில் எதிரொலித்தது.
![bjp-admk](http://image.nakkheeran.in/cdn/farfuture/dVgMx1f54Rv0gYm4h9eWBBbrDac6bKcaCIl3gJg3ks8/1559802438/sites/default/files/inline-images/bjp-admk%2031.jpg)
எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்றத் தேர்தலில் பாஜக வெற்றி பெறுவதை விரும்பவில்லை. அதனால்தான் தேர்தலுக்கு சற்று முன்புவரை தம்பிதுரை, அன்வர்ராஜா ஆகியோரை பாஜகவிற்கு எதிராகப் பேசவைத்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமி, பாராளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்றத்திற்கு இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என கோரிக்கை வைத்தார்.
அவரது விருப்பத்திற்கு மாறாக சட்டமன்ற இடைத்தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அந்த இடைத்தேர்தலுக்கு ஏற்றவாறு பாஜகவைக் கேட்காமலேயே பாமகவுடன் கூட்டணி வைத்தார். அத்துடன் எடப்பாடி பழனிசாமியின் முழுக்கவனமும் சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றி பெறுவதிலேயே இருந்தது. பாஜக எட்டு எம்பித் தொகுதிகளை கேட்டது. அதை தர மறுத்தார். பாஜக போட்டிபோட்ட தொகுதிகளில் அதிமுக அமைச்சர்கள் வேலை செய்யவில்லை. அதிமுக வாக்குகளும் பாஜகவிற்கு விழவில்லை. இவ்வளவு குழிப்பறிப்பு வேலைகளையும் செய்த அதிமுக, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் மந்திரிசபையில் இடம் கேட்கிறது. அதிமுகவை மந்திரிசபையில் சேர்க்கவே கூடாது என கடும் கண்டனத்தை தமிழக பாஜக அகில இந்திய தலைமையிடம் பதிவு செய்துள்ளது.