ஊரடங்கால் வீட்டில் இருந்த தி.மு.க. தலைவர் ஸ்டாலின், வெள்ளிக் கிழமையன்று தொகுதியில் களப்பணியில் ஈடுபட்டார்.இது பற்றி விசாரித்த போது,ஸ்டாலின் வீட்டில் இருக்கார் என்று தெரிஞ்சதும் எடப்பாடி,ஸ்டாலின் இந்த நேரத்தில் இப்படி இருப்பதுதான்,நாம் அரசியல் செய்ய பயன்படும் என்று சக அமைச்சர்களிடம் கூறியுள்ளதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தி.மு.க. எம்.எல்.ஏக்கள் ஆளுந்தரப்புக்கு முன்பே ஃபீல்டில் இறங்கியதாகச் சொல்லப்படுகிறது.
அதிலும் குறிப்பாக, தி.மு.க மகளிர் அணிச் செயலாளரும் எம்.பி.யுமான கனிமொழி,தன் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ஒன்றரை கோடியைக் கொரோனா தொடர்பான மருத்துவ உபகரணங்களைத் தனது தொகுதிக்கு வாங்குவதற்காக ஒதுக்கினார்.சென்னையில் இருந்து 700 கி.மீ.தூரம் காரிலேயே இரவு நேரத்தில் பயணித்துத் தூத்துக்குடி சென்ற கனிமொழி,அங்குள்ள ஆட்சியர் சந்தீப் நந்தூரியைப் பார்த்து, காசோலையைக் கொடுத்திருக்கார். அதோடு, தூத்துக்குடி ஜி.ஹெச்.சுக்கு சென்று, அங்குள்ள டாக்டர்களுக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கும் முகக் கவசங்கள், சானிடைசர்கள் மற்றும் நோய்த் தடுப்பு கவச ஆடைகள் உள்ளிட்ட பொருட்களையும் விநியோகித்துள்ளார்.தூத்துக்குடி தொகுதியிலேயே தங்கியிருக்கும் கனிமொழி,தொகுதி எம்.எல்.ஏ.அனிதாவுடன் சேர்ந்து அங்குள்ள தூய்மைப் பணியாளர்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகைப் பொருட்களையும் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில் கனிமொழி களமிறங்கியதால் தான், மு.க.ஸ்டாலினும் கொளத்தூர் தொகுதிக்கு நேரில் சென்றார் என்று தகவல் பரவியது. ஆனால் கனிமொழி தன் கட்சித் தலைவரான ஸ்டாலினிடம் கூறிவிட்டுத்தான் தூத்துக்குடி கிளம்பினார்.அவர் தூத்துக்குடியில் இருந்த போது,ஸ்டாலின் ஒரு டாக்டர்கள் டீமுடன் வீடியோ கான்பரன்சில் ஆலோசனை நடத்தி, நேரடியாக விசிட் அடிப்பதில் உள்ள மருத்துவரீதியான பின்னணிகள், தேவையான உபகரணங்கள், ட்ரீட் மெண்ட் முறை, அரசின் நடவடிக்கைகள் பற்றிக் கேட்டு தெரிந்து கொண்டதாகக் கூறுகின்றனர். அதோடு, பூங்கோதை ஆலடி அருணா தலைமையிலான தி.மு.க. மருத்துவர் அணி சார்பில் 70 டாக்டர்களை களமிறக்கினார்.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.பிக்கள்,ஊராட்சி உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு நாளும் என்ன வேலைத்திட்டமென்பதையும் விளக்கிவிட்டு,அவரும் வெள்ளிக் கிழமையன்று கொளத்தூர் தொகுதியில் தூய்மைப் பணியாளர்கள், காவலர்கள், மருத்துவத் துறையினர், பொதுமக்கள் என்று எல்லாரையும் சந்தித்து உதவிகளை வழங்கினார்.