Skip to main content

“ஜெகபர் அலி மரணத்திற்கு அனைத்து அதிகாரிகளும் பொறுப்பு” - இபிஎஸ் கண்டனம்

Published on 20/01/2025 | Edited on 20/01/2025
 EPS condemns Jagabar Ali's incident in pudukkottai

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜகபர் அலி, திருமயம் தாலுகாவில் தொடர்ந்து கணிம வளம் கொள்ளை நடப்பதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல முறை மனு கொடுத்து வந்துள்ளார். இதனால், அவர் அச்சுறுத்தலுக்கு ஆளாகி வந்தார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 17ஆம் தேதி ஜகபர் அலி தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த லாரி ஒன்று ஜகபர் அலி மீது மோதி விபத்தானது. இந்த விபத்தில், ஜகபர் அலி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதே நேரத்தில், இந்த விபத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி, இந்த சம்பவத்திற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கோரிக்கை வைத்தார். 

இந்த நிலையில், இந்த சம்பவத்திற்கு அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘புதுக்கோட்டை தெற்கு மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றிய சிறுபான்மை பிரிவு செயலாளரும், முன்னாள் அ.தி.மு.க ஒன்றிய குழு உறுப்பினர், புதுக்கோட்டை மாவட்ட  அமைச்சூர் கபடி கழக செயலாளரும், சமூக ஆர்வலருமான திரு.ஜெபகர் அலி, சமூக விரோதிகளால் லாரி ஏற்றிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. கனிமவளக் கொள்ளை தொடர்பாக, திருமயம் வட்டாட்சியரைச் சந்தித்து புகார் செய்து, 15 நாட்களுக்கும் மேலாக ஆகியும், மாவட்ட கனிமவளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்தும், மாவட்ட ஆட்சியரிடமே புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், தற்போது அவரைப் சமூக விரோதிகள் லாரி ஏற்று படு கொலை செய்திருக்கிறார்கள் என்ற செய்தி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

 EPS condemns Jagabar Ali's incident in pudukkottai

மேலும், இந்தக் கொலைக் குற்றத்தின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள், கனிமவளக் கொள்ளையர்களை விட்டுவிட்டு, லாரி டிரைவர் உள்ளிட்டவர்களை மட்டும் கைது செய்து வழக்கை திசை திருப்பி வருகிறது இந்த அரசு. கனிமவளக் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல், புகார் அளித்தவரைக் காட்டிக் கொடுத்து, மிக மிக மோசமான முன்னுதாரணத்தை ஏற்படுத்தியிருக்கிறது திமுக அரசு. ஜெகபர் அலி இறப்புக்கு நீதி வேண்டும். கனிமவளக் கொள்ளையர்கள் மட்டுமின்றி, அவர் கொடுத்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த அனைத்து அதிகாரிகளும் அவரது மரணத்திற்குப் பொறுப்பு. உரிய விசாரணை நடத்தி, அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்

சார்ந்த செய்திகள்