2023 - 2024 ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனால் கடந்த 20ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. தொடர்ந்து 21ம் தேதி தமிழ்நாடு வேளாண் பட்ஜெட் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தால் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று யுகாதி என்பதால் சட்டப்பேரவைக்கு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், இன்று பட்ஜெட் மீதான விவாதம் சட்டசபையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
கூட்டத்தொடர் துவங்கியதும் மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. பாடகி வாணி ஜெயராம் மறைவிற்கும் இரங்கல் குறிப்பு வாசிக்கப்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை காஞ்சிபுரம் பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து கொண்டு வந்த கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் விளக்கமளித்தார்.
தொடர்ந்து கிருஷ்ணகிரியில் நடந்த ஆணவக்கொலை தொடர்பாக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கவன ஈர்ப்பு தீர்மானத்தை கொண்டு வந்தார். கிருஷ்ணகிரி இளைஞர் ஜெகன் வெட்டிக்கொலை செய்யப்பட்டதில் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.
இதனைத் தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “எதிர்க்கட்சித் தலைவர் எழுப்பிய கேள்விக்கு பதில் அளிக்க விரும்புகிறேன். கிருஷ்ணகிரி மாவட்டம், காவிரிப்பட்டணம், கிட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெகன்(28) மார்ச் 21 அன்று சுமார் 1.30 மணியளவில் கே.ஆர்.பி. அணை சாலையில் சென்று கொண்டு இருந்த போது, முல்கான் கோட்டையைச் சேர்ந்த அதிமுக கிளைச்செயலாளர் சங்கர் உள்ளிட்ட மூவர் ஜெகனை வழிமறித்து ஆயுதங்களால் தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக காவிரிப்பட்டணம் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்த விசாரணையில், கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படிக்கும் சங்கரின் மகள் சரண்யாவை டைல்ஸ் பதிக்கும் தொழிலாளியான ஜெகன் காதலித்து பெண்வீட்டாரின் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு அழைத்துச் சென்று 26/01/2023 அன்று கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டதாகத் தெரிகிறது. இதனால் ஆத்திரமுற்ற சங்கர் உள்ளிட்டோர் இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். சங்கர் காவல்துறையினரால் சேலம் மத்திய சிலையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கொலையில் சம்பந்தப்பட்டு கைது செய்யப்பட்டவர் அவதானிப்பட்டி அதிமுக கிளைச்செயலாளர் என்பது காவல்துறையினரால் உறுதி செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் உரிய நடவடிக்கைகளும் விழிப்புணர்வுப் பணிகளும் காவல்துறை சார்பிலும் மாவட்ட நிர்வாகம் சார்பிலும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சமூக நீதி காக்கும் மண்ணாக விளங்கும் தமிழ்நாட்டில் இது போல் நிகழாமல் அரசியலுக்கு அப்பாற்பட்டு நாம் அனைவரும் மனிதநேய அடிப்படையில் சமூக நல்லிணக்கத்தைக் காக்க வேண்டும்” எனக் கூறினார்.