ஆண்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதி வேட்பாளரின் அதிரடி நடவடிக்கையால் வாக்காளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளது மட்டுமின்றி, அதிமுக கட்சியினரும் வேட்பாளர் மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிபட்டி தொகுதியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வேட்பாளராக லோகிராசன், திமுக வேட்பாளராக மகாராசன், அமமுக வேட்பாளராக ஜெயக்குமார் உட்பட மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர் கட்சி என மொத்தம் 20 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். வாக்குப் பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பு அதிமுகவினரால் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா பகிரங்கமாக நடத்தப்பட்டது.
வாக்கு பதிவு அன்று ஏராளமானோர் தங்களுக்குப் பணம் கிடைக்கவில்லை என்று அதிமுக நிர்வாகிகளை நச்சரிக்கத் தொடங்கினர். இது ஆண்டிபட்டி தொகுதியின் நகர்புறத்தில் தொடங்கி கிராமபுறங்கள் வரை எதிரொலித்தது. இதனால் கலக்கம் அடைந்த அதிமுக வேட்பாளர், நேரடியாக களத்தில் இறங்கி பணப்பட்டுவாடா செய்தார். ஆனால், வெற்றிக்கான வாக்குகள் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கம் அடைந்தார்.
தொடர்ந்து கட்சியின் கிளைச் செயலாளர் முதல் அனைத்து பொறுப்பாளர்கள் மீதும் சந்தேகமடைந்து ஏகவசனத்தில் திட்டி தீர்த்துவந்தார். திடீரென்று ஒரு குழுவை அமைத்து, தெருக்கள் தோறும் வீடு வீடாகச் சென்று ஒட்டுக்குப் பணம் வந்ததா? எத்தனை பேர் பணம் பெற்றுள்ளனர் என்று புள்ளிவிவரங்களை சேகரித்தார். இதனால், வாக்காளர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதிமுக வேட்பாளரின் இந்தச் செயலால் கிளைச் செயலாளர், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என அனைத்து தரப்பினரும் கடும் அதிருப்தி அடைந்தது மட்டுமின்றி, வேட்பாளர் மீது வெறுப்பும் கோபமும் அடைந்துள்ளனர். தேனி மாவட்டத்தில் எந்த ஒரு அதிமுக வேட்பாளரும் செய்யாத செயலை ஆண்டிபட்டி வேட்பாளர் லோகிராசன் செய்திருப்பது மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.