Skip to main content

நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்... ராமதாஸ்

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

ஊரக, ஏழை மாணவர்களின்  உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் கூறியுள்ளார்.
 

பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு பிற்போக்கானது; ஏழைகளை பாதிக்கும்! என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 
 

இந்தியா முழுவதும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்புகளுக்கு மாணவர்களை சேர்ப்பதற்காக பொதுநுழைவுத் தேர்வு அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் அறிவித்திருக்கிறார். கிராமப்புற ஏழை மாணவர்களின் பட்டப்படிப்புக் கனவுகளை சிதைக்கும் நோக்கம் கொண்ட மத்திய அரசின் இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கதாகும்.


 

ENTRANCE EXAMINATION



மத்திய அரசு கடந்த மே மாதம் வெளியிட்ட புதிய தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கலை அறிவியல் உள்ளிட்ட பட்டப்படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டிருந்தது. அப்போதே பாட்டாளி மக்கள் கட்சி இதை கடுமையாக எதிர்த்தது. தேசியக் கல்விக் கொள்கையில் செய்யப்பட வேண்டிய திருத்தங்கள் குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சரிடம் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையிலும் நுழைவுத்தேர்வு கூடாது என்று தெரிவிக்கப் பட்டிருந்தது. இதேபோல் மேலும் பல கல்வியாளர்களும் பொது நுழைவுத்தேர்வுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்த நிலையில், பொதுநுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று திருத்தப்பட்ட தேசியக் கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகளுக்கு மத்திய அரசு கொஞ்சமும் மதிப்பளிக்கவில்லை என்பது உறுதியாகியிருக்கிறது.
 

நுழைவுத்தேர்வுகள் என்பது ஊரக, ஏழை மாணவர்களின் உயர்கல்வி வாய்ப்பைப் பறிக்கும் நுழையாத்  தேர்வு என்பதை பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். தமிழகத்தில் ஊரக, ஏழை மாணவர்களின் தொழில்கல்விக்கு தடையாக இருந்த மருத்துவம், பொறியியல் படிப்புக்கான நுழைவுத்தேர்வை அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்கள் நடத்தி அகற்றியது பாட்டாளி மக்கள் கட்சி தான். அதன்மூலம் கிராமப்புற மாணவர்களுக்கு கிடைத்த மருத்துவக் கல்வி வாய்ப்புகளை நீட் தேர்வை அறிமுகம் செய்ததன் மூலம் மத்திய அரசு பறித்துக் கொண்டது. அடுத்தக்கட்டமாக பொறியியல் படிப்புக்கும் நீட் தேர்வை விரிவுபடுத்த நடவடிக்கை எடுத்து வரும் மத்திய அரசு, இப்போது பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு கொண்டுவரப்படும் என்று அறிவித்திருப்பது பிற்போக்கானதாகும்.


 

நுழைவுத்தேர்வுகள் கல்வியின் தரத்தை எந்த வகையிலும் உயர்த்தவில்லை என்பதற்கு நீட் தேர்வுகள் தான் உதாரணம் ஆகும். நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு தான் தகுதி குறைந்தவர்களும், பணத்தை மட்டுமே வைத்திருப்பவர்களும் மருத்துவப் படிப்பில் சேருவது அதிகரித்து வருகிறது. நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டதால் மாணவர்களுக்கும், மருத்துவக் கல்விக்கும் எந்த நன்மையும் ஏற்பட்டு விடவில்லை. மாறாக, ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெரு நீட் பயிற்சி மையங்கள் ஏற்படுத்தப் பட்டு, நீர் தேர்வுப் பயிற்சி ஆண்டுக்கு ரூ.10,000 கோடி வணிகமாக மாற்றப்பட்டது தான் மிச்சமாகும். இப்போதும் அதேபோன்று புதிய கல்வி வணிகத்தை ஊக்குவிப்பதற்காகத் தான் பட்டப்படிப்புகளுக்கும் பொது நுழைவுத்தேர்வை மத்திய அரசு திணிக்கிறதோ என்ற ஐயம் ஏற்படுவதை தவிர்க்க முடியவில்லை.


 

பொதுவாக வாய்ப்புகள் முழுமையாக உருவாக்கப்பட்ட பிறகு தான் வடிகட்டல்கள் செய்யப்பட வேண்டும். இந்தியாவைப் பொருத்தவரை அனைவருக்கும் உயர்கல்வி வாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை. நாட்டில் உயர்கல்வி கற்போரின் அளவு இன்னும் 26.3 விழுக்காட்டைத் தண்டவில்லை. இதற்கான காரணம்  போதிய கட்டமைப்பு வசதிகள் உருவாக்கப்படவில்லை என்பதுடன், உயர்கல்வி கற்க மாணவர்கள் முன்வராததும் ஆகும். இதை உணர்ந்து தான் உயர்கல்வி கற்போரின் அளவை 50% என்ற அளவுக்கு உயர்த்தும் நோக்கத்துடன் முதல் தலைமுறை மாணவர்களுக்கு கல்விக் கட்டணம் ரத்து, கூடுதல் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு பயனளிக்கத் தொடங்கியுள்ள நிலையில், பட்டப்படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வுகளை திணிப்பது ஊரக மாணவர்களை கல்லூரிகள் பக்கமே வராமல் தடுத்து விடும். மொத்தத்தில் இது தமிழகத்தில் ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி முறையை விட மிகவும் மோசமான சூழலை ஏற்படுத்தி விடும். இது தவிர்க்கப்பட வேண்டும்.

 

முதலில் அனைவருக்கும் கல்வி இயக்கம், பின்னர் அனைவருக்கும்  இடைநிலைக் கல்வி இயக்கம்  என்பன போன்று புரட்சிகரமான திட்டங்களை செயல்படுத்திய மத்திய அரசு, கல்லூரிக் கல்வியையும் ஊக்குவிக்கும் வகையில் சிறப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஊரக, ஏழை மாணவர்களின்  உயர்கல்வி கனவுகளுக்கு தடை போடும் நுழைவுத் தேர்வு திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும். இவ்வாறு கூறியுள்ளார். 

 


 

சார்ந்த செய்திகள்