நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் தொடர்ந்து அதிமுக தோல்வி அடைந்திருக்கும் நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து அண்மையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் தொகுதி வாரியாக ஆலோசனைகளை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அதிமுக அவை தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் இன்று அவசர செயற்குழு கூட்டத்திற்கு அதிமுக அழைப்பு விடுத்திருந்தது.
தற்போது சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இந்த அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் சுமார் 300 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த செயற்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும், மூன்று சிறப்புத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்கட்சி விவகாரம், கட்சியைப் பலப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. அதேபோல் அடுத்தகட்ட தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. எடப்பாடி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் நடக்கும் சட்ட ஒழுங்கு பிரச்சனை; மின்சார கட்டணம் உயர்வு; சென்னை மாநகராட்சி சார்பாக ஏற்றபட்ட தொழில் வரி உயர்வு ஆகியவைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. அதிமுகவின் இரண்டு விதிகளில் மாற்றம் செய்யப்பட்டு மூன்று சிறப்புத் தீர்மானங்கள் கொண்டுவரப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது.