நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக தமிழக முதலமைச்சரும் தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதே போன்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (24.03.2024) மாலை திருச்சி மாவட்டம் நவலூர் குட்டப்பட்டு வண்ணாங்கோயில் என்ற இடத்தில் இந்த நாடாளுமன்ற தேர்தலுக்கான அ.தி.மு.க.வின் முதல் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தொடங்கியுள்ளார்.
இந்நிலையில், காஞ்சிபுரத்தில் தி.மு.க. வேட்பாளார் செல்வத்தை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில், “ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு. எனவே ஏப்ரல் 17 ஆம் தேதி வரை தேர்தல் பிரச்சாரம் செய்யலாம். தி.மு.க. தொண்டர்கள் பொறுப்பேற்று பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும். ஜுன் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை. ஜூன் 3 ஆம் தேதி கலைஞரின் 100 ஆவது பிறந்த நாள் முடிந்து 101 வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கிறார். நாம் அவருக்கு கொடுக்க கூடிய பரிசாக 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று, நாம் கை காட்டுபவரே அடுத்த பிரதமராக வர வேண்டும்” எனப் பேசினார்.
முன்னதாக காஞ்சிபுரத்தில் பிரச்சாரத்தை தொடங்கும் முன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேரறிஞர் அண்ணா இல்லத்திற்கு சென்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர்கள் பதிவேட்டில், “பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சி இல்லத்தில் இருந்து ‘மாநில உரிமைகளை மீட்க தலைவரின் குரல்’ 2 ஆம் கட்ட நாடாளுமன்ற பிரச்சாரப் பயணத்தை துவக்குவதில் பெருமை கொள்கிறோம். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் புகழ் ஓங்குக. தலைவர் தலைமையில் திராவிட மாடல் அரசு வெல்லட்டும். பாசிசம் ஒழியட்டும். BELONG TO THE DRAVIDIAN STOCK” எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும் இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “மாநில சுயாட்சியின் உரிமைக்குரல் நம் அண்ணாவின் மண்ணில், பாசிஸ்டுகளை வீழ்த்துவதற்கு உறுதி ஏற்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.