உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் கரோனா தாக்குதல் தமிழகத்தில் தீவிரம் அடைந்து வருகிறது. இந்த நிலையில் கரோனா தாக்குதல் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக தமிழகம் முழுவதும் உள்ள வீடுகள், கடைகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் தமிழக மின் வாரியம் மின் கணக்கீடு செய்யாமல் இருந்தது.
ஆனால் தற்பொழுது தமிழகம் முழுவதும் மின் கணக்கிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. மின் கணக்கீடு என்ற பெயரில் மின்வாரியம் பகல் கொள்ளையில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண்டித்தும் மின்வாரியத்தின் மின் கட்டணக் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும். மார்ச், ஏப்ரல் மாத மின் கணக்கீட்டை தனியாகவும், மே, ஜூன் மாத கணக்கீட்டை தனியாகவும் அளவீடு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி தலைமையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் திண்டுக்கல் பழனி புறவழிச்சாலையை அடுத்துள்ள மீனாட்சி நாயக்கன்பட்டி செயல்பட்டுவரும் மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக பழனி புறவழிச் சாலையில் இருந்து ஊர்வலமாக வந்து மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் தமிழக அரசுக்கு எதிராகவும் மின் வாரியத்திற்கு எதிராகவும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்த முற்றுகை போராட்டத்தில் 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு அரசுக்கு எதிராக கண்டன குரல் கொடுத்தனர்.
அதன்பின் பத்திரிகையாளர்களிடம் பேசிய பாலபாரதி, தமிழ்நாடு மின்சார வாரியம் மிகப்பெரிய கொள்ளை நடத்தி வருகிறது. பலதரப்பட்ட மக்கள் செலுத்தவேண்டிய மின் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளது. ஏற்கனவே 100 யூனிட் மின்சாரம் இலவசமாக கொடுத்து வருகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த கரோனா காலத்தில் நான்கு மாதத்துக்கு மொத்தமாக மின் கணக்கீட்டை எடுத்து அதை இரண்டாக பிரித்து புதிய மின் கட்டணமாக மக்கள் தலையில் சுமத்தி வருகிறார்கள். இதனால் வீடுகளில் மின் கட்டணம் 4 ஆயிரம் முதல் 9 ஆயிரம் வரை வருகிறது.
கடந்த மார்ச் மாதத்துக்கு முன்பு 100 யூனிட் இலவசமாக பயன்படுத்தி வந்த மக்கள்கூட இன்றைக்கு ஆயிரக்கணக்கில் கட்ட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். அதனால் உடனடியாக மின்சார வாரியம் மின் கட்டணத்தை பரிசீலனை செய்ய வேண்டும். அதுவும் இந்த கரோனா காலத்தில் மின்சார கட்டணம் வசூலிக்கக்கூடாது. இந்த கரோனா காலத்தில் அரசு ஆயிரம் ரூபாயும், அரிசி, பருப்பு மக்களுக்கு நிவாரணமாக கொடுத்துவிட்டு, இப்போது மின்கட்டணம் மூலம் ரூபாய் 3 ஆயிரம் வரை ஏழை, எளிய மக்களிடம் கொள்ளை அடித்து வருகிறது. இந்த ஊரடங்கு காலத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு அதற்கான மின் கட்டணத்தை தமிழக அரசுக்கு கொடுக்க முன் வர வேண்டும்.
அதுபோல் 2020 மின் திருத்த சட்டத்தை வாபஸ் வாங்க வேண்டும். இப்படி தமிழகம் முழுவதும் மக்களிடம் மின் கட்டண கொள்ளை நடந்து வருகிறது. இதை தடுத்து நிறுத்த அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார்.
அதன்பின் மாவட்ட மின்வாரிய அதிகாரியான வினோத்திடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றிய செயலாளர் சக்திவேல், திண்டுக்கல் ஒன்றிய செயலாளர் அசோக்குமார் கோஷ் மற்றும் தாதன் கோட்டை ஆறுமுகம் உள்பட தோழர்கள் பலர் கலந்து கொண்டனர்.