கரூர் எம்.பி. தேர்தலுக்கு கடைசி நாள் பிரச்சாரத்திற்கு செந்தில்பாலாஜி அனுமதி கேட்டிருந்த நிலையில் நேரத்தை மாற்றி அமைத்ததால் செந்தில்பாலாஜி உள்ளிருப்பு போராட்டம் நடத்தினார். பிறகு கலெக்டர் பிரச்சார நேரத்தை ரத்து பண்ணினார். அதையும் மீறி திமுகவினர் நீதிமன்றத்தில் அனுமதி வாங்கினர். ஆனால் தேர்தலை ரத்து செய்வேன். இல்லை என்றால் என்னை மாற்றி விடுவார்கள் என்று கரூர் கலெக்டர் வேட்பாளர் ஜோதிமணியிடம் செல்போனில் பேசியதால் பரபரப்படைந்தது. இறுதி பிரச்சாரம் கலவரத்தில் முடிந்தது. அதுபோன்ற நிலை தற்போது அரவக்குறிச்சி பகுதியில் கடைசி கட்ட பிரச்சார அனுமதிக்கு பிரச்சனை ஆகி வருகிறது.
அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம், திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டமன்ற தொகுதி இடைதேர்தல் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் பிரச்சாரத்தின் இறுதி நாளான நாளை அரவக்குறிச்சி தொகுதியில் திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்கிறார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் ஆன்லைன் மூலம் 3 நாட்களுக்கு முன்னதாகவே அனுமதி கேட்டு விண்ணப்பிக்கப்பட்டது. இதில் மொத்தம் 12 இடங்களில் பிரச்சாரம் செய்வதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அரவக்குறிச்சி டவுன் பகுதியில் ஸ்டாலின், பிரச்சாரத்தை நிறைவு செய்யும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் மீனாட்சி, திமுகவினர் கேட்டிருந்த 12 இடங்களில் 5 இடங்களை அதிமுகவினரும் கேட்டிருப்பதாக தகவல் தெரிவித்தார். ஆனால், அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பி.எஸ். என யாரும் பிரச்சாரத்திற்கு வராதநிலையில் அதிமுகவினர் பிரச்சாரத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கவே இல்லை.
இதையடுத்து செந்தில்பாலாஜி உள்ளிட்ட திமுகவினர் காலை 11 மணியளவில் அரவக்குறிச்சி தேர்தல் அலுவலர் மீனாட்சியின் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு பேச்சுவார்த்தை நடந்தது. இதில் திமுகவுக்கு குறிப்பிட்ட 5 இடங்களுக்கு மட்டுமே அனுமதி தரப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக பள்ளப்பட்டி பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுக்காமல் காலையிலே எடுத்துக்கொள்ளுங்கள் என்று கடந்த முறை எம்.பி. தேர்தலுக்கு செய்தது போன்றே தேர்தல் அதிகாரிகள் தடை விதிப்பதால். இதை திமுகவினர் ஏற்காமல் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்து தர்ணா நடத்தினர். அதிகாரி மீனாட்சி, நீங்கள் இங்கிருந்து செல்லுங்கள், அனுமதி குறித்து நான் தகவல் தெரிவிக்கிறேன் என்றார். இதை திமுக தரப்பினர் ஏற்க மறுத்தனர். இதனால் திமுகவினர் அலுவலகத்திற்குள்ளேயே அமர்ந்திருக்கின்றனர்.