தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருக்கும் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம், அரசியல் கட்சியை அறிவித்ததை தொடர்ந்து, உறுப்பினர் சேர்க்கை, நிர்வாகிகள் நியமனம் என அடுத்தடுத்து நடவடிக்கைகளை விஜய் மேற்கொண்டார். அதனை தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் மாதம் த.வெ.க. கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்தார். சிகப்பு, மஞ்சள் நிறத்தில் இருந்த கொடியின் மத்தியில் யானைகள் வாகைப் பூ, 28 நட்சத்திரங்கள் எனப் பல அடையாளங்களும், குறியீடுகளும் இடம்பெற்றிருந்தனர்.
இதற்கிடையில், தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னம், த.வெ.க. கொடியில் இடம்பெற்றுள்ளதாக அக்கட்சியின் மாநிலத் தலைவர் பி. ஆனந்தன் எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இது குறித்து கூறிய அவர், “பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட யானை சின்னத்தை எந்த மாநில கட்சியும் பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் சட்டத்திருத்தம் கொண்டு வந்துள்ளது. எனவே, உடனடியாக யானையை கொடியில் இருந்து நீக்க வேண்டும்; இல்லை என்றால் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுப்போன்” என்றார்.
இதனை தொடர்ந்து, இந்த விவகாரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சி தரப்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில், பகுஜன் சமாஜ் கட்சி அளித்த புகாருக்கு இந்திய தேர்தல் ஆணையம் தற்போது பதில் அளித்துள்ளது. அதில், ‘கட்சியினுடைய கொடி விவகாரங்களில் தேர்தல் ஆணையம் தலையிடாது. ஒரு கட்சியினுடைய கொடியையோ அல்லது கொடியில் இடம் பெற்றிருக்கும் சின்னங்களையோ தேர்தல் ஆணையம் அங்கீரிப்பது இல்லை. 1950ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட விதிமுறையின்படி, ஒரு நாட்டினுடைய சின்னத்தை தவிர மற்ற சின்னத்தை பயன்படுத்த எந்தவித தடையும் இல்லை. எனவே, தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியில் இடம்பெற்றிருக்கும் யானை சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறக்கூடிய அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இல்லை.
தமிழக வெற்றிக் கழக கட்சியை பொறுத்தவரை, தேர்தலின் போது வாக்கு பெறுவதற்காக அவர்கள் யானை சின்னத்தைப் பயன்படுத்த முடியாது. தேர்தலின் போது, கட்சியினுடைய வாக்கு சின்னம் என்ன என்பதை தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்யப்படும். எனவே, இந்த கட்சிக் கொடி விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட முடியாது’ எனத் தெரிவித்துள்ளது.