தர்மபுரி மாவட்டத்தில் அதிமுக ஜெயலலிதா பேரவை செயலாளர் எஸ்.ஆர். இல்லத் திருமண விழா இன்று (19-11-23) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர், “அதிமுக சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்ட கட்சி. அதிமுக, பா.ஜ.க. கூட்டணியில் இருந்து பிரிந்து விட்டது என்று தெளிவாக அறிவித்து விட்டோம். மீண்டும் தெரிவிக்கிறேன், அதிமுகவுக்கும், பா.ஜ.க.வுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. ஆனால், அதிமுகவின் இந்த முடிவை பொறுத்துக்கொள்ள முடியாத திமுக, வேண்டுமென்றே திட்டமிட்டு பா.ஜ.க.வுடன் நாங்கள் மீண்டும் கூட்டணி வைப்போம் என்று பொய் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது திட்டமிட்ட ஒரு விஷமத்தனமான பிரச்சாரம் என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்.
காங்கிரஸும், திமுகவும் இணைந்து கொண்டுவந்த நீட் தேர்வை தற்போது எதிர்ப்பதும் அந்த இரு கட்சிகள் தான். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் போதைப்பொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மன்னராட்சி முறையைப் போல, திமுக குடும்ப ஆட்சி நடத்தி வருகின்றனர். திமுகவில் கட்சி முன்னோடிகளுக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும் வாய்ப்பில்லை. அடுத்த தேர்தல் எப்போது வந்தாலும், அதிமுக தான் வெற்றி பெறும்” என்று கூறினார்.