Skip to main content

“சித்து வேலைகளில் ஈடுபடும் திமுக” - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

Published on 05/05/2023 | Edited on 05/05/2023

 

Edappadi Palaniswami alleges that "DMK is involved in Sidhu activities"

 

“தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு அரசு செயல்பட்டால் அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது” என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரசுப் போக்குவரத்துக் கழக நகரப் பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் என்று அறிவிக்கப்பட்டது. அமைச்சர் பொன்முடி மகளிரை ஓசியில் பயணம் செய்பவர்கள் என்று பொருள்படும்படி கேலி பேசினார். போக்குவரத்துக் கழகங்கள் மக்களுக்காக இயங்கி வரும் ஒரு சேவைத் துறை. நஷ்டம் ஏற்பட்டால் அதை ஈடுகட்ட அரசு நிதியை வழங்க வேண்டும். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிக் காலங்களில் போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு நிதியாகப் பல கோடி ரூபாய் வழங்கப்பட்டது.

 

தமிழக அரசுக்கு பல்வேறு துறைகளின் மூலம் வருமானம் வரும் நிலையில், அரசுப் பேருந்துத் துறை நஷ்டத்தில் நடப்பதாகக் காரணம் காட்டி, கிராமப்புற பேருந்துகளை நிறுத்தும் இந்த மக்கள் விரோத அரசின் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிவடைய உள்ள நிலையில் ஒரு புதிய பேருந்து கூட வாங்காமல், ஏற்கெனவே சென்னையில் தனியார் பேருந்துகள் ஒப்பந்த முறையில் இயக்கப்படும் என்று கூறிய அரசு, தற்போது ஒட்டுநர்கள் குறைவாக உள்ளனர்; எனவே, நடத்துநர்களுக்கு வேலையில்லை என்று கடந்த சில நாட்களாக அரசு நடத்துநர்களுக்குப் பணி வழங்காமல் இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

 

இந்நிலையைப் பார்க்கும்போது, பேருந்து சேவையைத் தனியாருக்குத் தாரை வார்க்க இது போன்ற சித்து விளையாட்டுகளில் திமுக அரசு ஈடுபட்டுள்ளதோ என்ற சந்தேகம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது. போக்குவரத்துத் துறை என்பது ஒரு சேவைத் துறை. இதில் தமிழக மக்களின் நல்வாழ்வுக்கு எதிராக, ஏதேனும் மறைமுகத் திட்டத்தோடு அரசு செயல்பட்டால், அதை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்காது. எனவே, உடனடியாக புதிய பேருந்துகளை வாங்கி, மகளிர் பயணம் செய்வதற்கு வசதியாக நகரப் பேருந்துகளின் செயல்பாட்டினை அதிகரிக்க வேண்டும் என்று அரசை வலியுறுத்துகிறேன்.

 

 

சார்ந்த செய்திகள்