அ.தி.மு.க தலைமையிலான. கூட்டணி சார்பில் கடலூர் தொகுதியில் போட்டியிடும் பாமக வேட்பாளர் கோவிந்தசாமியை ஆதரித்து கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார்.
அப்போது அவர் பேசியதாவது “அ.தி.மு.க தலைமையிலான வலிமையான கூட்டணியை கண்டு எதிர்கட்சி தலைவர் மு.க ஸ்டாலின் மிரண்டு போயியுள்ளார். இந்தியா முழுவதிலும் ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளர் என்று யாரும் ஏற்று கொள்ளாதபோது ஸ்டாலின் மட்டும் ராகுல் காந்தி பிரதமர் என கனவு காண்கிறார். பாஜக தலைமையில் பல்வேறு மாநிலங்களில் அமைத்துள்ள வலுமையான கூட்டணியால் மீண்டும் மத்தியில் நரேந்திர மோடி பாரத பிரதமராவர்.
காங்கிரஸ் தமிழகத்தில் கம்யூனிஸ்ட்டுடன் கூட்டணி வைத்து கொண்டும், கேரளாவில் அதே காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டை எதிர்த்தும் போட்டியிடுகிறது.
கூட்டணி நிலையில்லாதபோது ராகுல்காந்தியால் நிலையான ஆட்சியை எப்படி அமைக்க முடியும்.
அண்டை நாட்டின் பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் உள்ள நிலையில், ராணுவ வீரர்கள் தாக்குதலுக்கு எதிர் தாக்குதல், தமிழக ராணுவ வீரர் மீட்பு உள்ளிட்ட பல்வேறு செயல்களை செய்வதற்கு, வலிமையான பிரதமரான நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்.
இக்கூட்டணி மூலம் கோதாவரி, காவிரி நதி நீர் இணைப்பு திட்டம், விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன், உணவு பூங்கா, கால்நடை மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட உள்ளது” என்று அவர் பேசினார்.