விஜய்யின் த.வெ.க. கட்சி முதல் மாநாடு விக்கிரவாண்டியிலுள்ள வி.சாலையில் நாளை (27-10-24) நடைபெறுகிறது. இந்நிலையில் அம்மாநாட்டு திடலில் ஏற்படுத்தப்பட்டிக்கும் முன்னேற்பாடுகளை பற்றி களத்திலிருக்கும் தமிழக வெற்றிக் கழக புறநகர் மாவட்ட தலைவர் இ.சி.ஆர். சரவணன் விவரிக்கிறார்.
தொண்டர்களுக்கு ஸ்நாக்ஸ், வாட்டர் பாட்டில், மிக்சர் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொடுத்து மாநாட்டிற்கு அழைத்து வருகிறோம். அவர்களின் பயண ஏற்பாடுகளுக்கு சில பொறுப்பாளர்களை நியமித்திருக்கிறோம். மாநாட்டு திடலில் கிட்டத்தட்ட 1,500 பேருக்கு மேல் வேலை செய்து வருகின்றனர். அது மட்டுமில்லாமல் நாளைக்கு 10,000 பேரை குழுக்களாக பிரித்து, வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய ஏற்பாடுகள் செய்துள்ளோம். 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ளும் அளவிற்கு மாநாட்டு வேலைகள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. மாநாட்டிற்காக பூஜை செய்ய வந்தபோது இங்கு மாநாடு நடக்குமா என்ற டவுட் இருந்தது. ஆனால், த.வெ.க. பொதுச்செயலாளர் என்.ஆனந்த் ஒரு மாதமாக மாநாட்டு திடலில் இருந்து பார்த்து பார்த்து வேலைகளை செய்து வருகிறார். வி.சாலையில் இன்னும் பத்து மாநாடு நடத்தலாம், அந்த அளவிற்கு அவர் சிறப்பான வேலைகளை செய்திருக்கிறார். ஏதோ மாநாடு நடத்தினோம், போனோம் என்றில்லாமல் வரலாறு பதிக்கனுங்க... அதனால்தான் 5 வருடத்திற்கு கட்சி கொடி பறக்க வேண்டுமென்று தலைமை முடிவெடுத்துள்ளது.
வி.சாலை என்ற பகுதி, கூகுளில் தேடினால் கூட கிடைக்காமலிருந்து. ஆனால், இன்றைக்கு வி.சாலையை பற்றி வெளிநாட்டில் இருப்பவர்கள் முதல் அடிமட்ட ஊரிலிருப்பவர்கள் வரை பேசுகிறார்கள். வி.சாலை பகுதி மக்களும் இதை பெருமையாக நினைத்து சந்தோஷப்படுகிறார்கள். அவர்களுக்கு இது திருவிழா மாதிரி இருக்கிறது. த.வெ.க கட்சி 6 மாதங்களுக்கு முன்பு தோன்றியது கிடையாது. ரசிகர் மன்றத்திலிருந்து தற்போது கட்சி உருவாகும் வரை 32 ஆண்டுகளாக விஜய்யுடன் பயணித்து வருகிறோம். அப்போது இருந்தே களப்பணிகளை செய்து வந்திருக்கிறோம். எங்களுக்கு ஒரு அடையாளத்தை விஜய் கொடுத்திருக்கிறார்.
சினிமாவில் முன்பு ‘இதெல்லாம் ஒரு மூஞ்சியா’ என்று விமர்சனம் செய்தவர்களுக்கு மத்தியில் இப்போது கட்சி தொடங்கி மக்களுக்கு நல்லது செய்ய விஜய் வந்திருப்பதை சந்தோஷமாக நினைக்கிறேன். 2026ல் அவர் முதல்வர் பதவிக்கு வர முழு வீச்சுடன் செயல்படுவோம். கட்சி தொடங்குவதற்கு முன்பு ஆலோசனை செய்ய விஜய் எங்களை அழைத்திருந்தார். அப்போது விஜய், ‘உங்களை நம்பிதான் வந்திருக்கிறேன்...நீங்கள்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்...நீங்கள்தான் எல்லாமே உங்களுக்காகத்தான்’ என்று பேசியிருந்தார். கட்சி தொடங்கிய அந்த நாள் மிகவும் சந்தோஷமாக இருந்தது. மாநாடுக்காக வைத்துள்ள கட் அவுட்டில் இருக்கும் தலைவர்களின் புகைப்படங்களை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியிருந்தனர். ஆனால் த.வெ.க.வினர் வைத்த கட் அவுட் போல் யாருமே வைத்திருக்க மாட்டார்கள். அரசியல் களமே ஆடிபோய் கிடக்குது. நாளை மாலை 7 மணிக்கு எல்லாவற்றிற்கும் பதில் கிடைக்கும் என்றார்.