நடந்துமுடிந்த ஜார்கண்ட் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த சோரன் முதலமைச்சராக பதவியேற்க இருக்கிறார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் மொத்தம் உள்ள 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும். கடந்த நவம்பர் மாதம் 30- ஆம் தேதி முதல் ஐந்து கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் 65.17% வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகளை எண்ணும் பணி (23.12.2019) அன்று நடந்தது.அதில் பாஜக கட்சி- 25 இடங்களிலும், ஏஜெஎஸ்யூ கட்சி- 2 இடங்களிலும், கம்யூனிஸ்ட் கட்சி- 1 இடத்திலும், தேசிய வாத காங்கிரஸ் கட்சி- 1 இடத்திலும், சுயேட்சை- 2 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி- 16 இடங்களிலும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா- 30 இடங்களிலும், ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா- 3 இடங்களிலும், ராஷ்ட்ரிய ஜனதா தளம்- 1 இடத்திலும் வெற்றி பெற்றன. இதில் காங்கிரஸ் கட்சி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த நிலையில், இந்த கூட்டணி 46 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைக்கிறது. இதனையடுத்து தற்போதைய ஜார்கண்ட் முதலமைச்சராக இருக்கும் பாஜகவைச் சேர்ந்த ரகுபர் தாஸ் என்பவர் ஹேமந்த சோரனின் சாதியை குறிப்பிட்டு தவறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் கடந்த அக்டோபர் மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் மொத்தம் உள்ள 90 தொகுதிகளில் பாஜக 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தனித்து நின்று 31 தொகுதிகளில் வென்றது. ஹரியானா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 46 தொகுதிகள் வேண்டும் என்பதால் மெஜாரிட்டி தேவையான தொகுதிகளை காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளும் பெறவில்லை. இதனால் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த ஜனநாயக ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்த பாஜக ஆட்சியைப் பிடித்தது. இந்த நிலையில் ஜனநாயக ஜனதா கட்சியின் எம்எல்ஏகளில் ஒருவர் திடீரென கட்சி தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளார். அவரை அடுத்து மேலும் சில எம்.எல்.ஏக்களும் தலைமைக்கு எதிராக திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாஜகவின் மெஜாரிட்டிக்கு பின்னடைவு ஏற்படலாம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசி வருகின்றனர்.
மேலும் இந்த எம்.எல்.ஏக்கள் ஆட்சிக்கு எதிராக திரும்பினால் பாஜக கூட்டணி ஆட்சி மெஜாரிட்டியை இழக்கும் என தெரிகிறது. இதனையடுத்து மீண்டும் சட்டசபையை கூட்டி முதல்வர் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்து வருகிறது. இதனால் ஹரியானா அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது. தேர்தல் பிரசாரத்தின்போது பாஜகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்து வாக்குகளைப்பெற்று தேர்தலுக்குப்பின் பாஜகவுடன் கூட்டணி அமைத்த ஜனநாயக ஜனதா கட்சியின் தலைமையை எதிர்த்து போராடி வரும் எம்.எல்.ஏக்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஆதரவு குவிந்து வருகிறது என்று சொல்கின்றனர்.