ஆளுநரின் பேச்சிற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தால் அவராகவே தனது பேச்சினை நிறுத்திவிடுவார் என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “ஆளுநர் என்றாலே சர்ச்சை நாயகன் தான். அப்படித்தான் அவரது பேச்சு அனைத்தும் இருக்கிறது. பேரறிஞர் அண்ணா தமிழ்நாடு எனப் பெயர் சூட்டினார் என்றால், சங்க இலக்கியத்தில் சிலப்பதிகாரத்திலேயே தமிழ்நாடு என்ற வார்த்தை இருக்கிறது. தமிழ்நாடு என்பதை தமிழகம் என நாம் சாதாரணமாகச் சொல்கிறோம். தமிழ்நாடு என்ற பெயரைக் கூட அவர் இப்படி பேசுவது, அவரது பதவிக்கு இது அழகாக இருக்கிறதா என்பது தெரியவில்லை.
கவர்னர் என்பவர் 5 வருடம் தமிழகத்தில் இருப்பவர். இதற்கு முன் இருந்த கவர்னர் புரோஹித்தை பற்றி நாம் இப்பொழுது பேசுவதில்லையே. அதனால் இவரை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. அவர் பேசுவதற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் இருந்தாலே அவர் பேசுவதை நிறுத்திவிடுவார். அவரது செயல்பாடுகள் உண்மையாகவே வருத்தமளிக்கக் கூடியதாகத்தான் உள்ளது” எனக் கூறினார்.