இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தர்மபுரிக்கு வந்திருந்தார். அப்போது அவர் ஊடகங்களிடம், “தமிழக ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி டிச. 29ம் தேதி சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” என்று கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், “ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் தலைமை ஏற்க வாய்ப்பு கிடைக்கும். அதுபோல் இந்தியாவுக்கு தற்போது வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆக்கப்பூர்வமான பணிகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
ஜி20 நாடுகளுக்கு இந்தியா தலைமை ஏற்றதற்கான இலச்சினையில் தாமரை சின்னம் இடம் பெற்றுள்ளது. பாஜகவின் சின்னமான தாமரையை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் சிறு தொழில்கள் முடங்கின. கொரோனா காலகட்டத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் மேலும் பாதிக்கப்பட்டன. இந்தத் தொழில் நிறுவனங்களை மீட்டெடுக்க இந்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
தமிழக ஆளுநர் அரசியலமைப்புச் சட்டத்தின்படி செயல்பட வேண்டும். சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை கிடப்பில் போட்டுள்ளார். ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு இன்னும் அனுமதி கொடுக்கவில்லை. அவரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும். இக்கோரிக்கையை வலியுறுத்தி டிச. 29ம் தேதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும்” இவ்வாறு முத்தரசன் கூறினார்.